‘இந்தியாவின் 90 சதவீத பகுதிகள் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்படும்’ – ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவின் 90 சதவீத இடங்கள், குறிப்பாக டெல்லியின் அனைத்துப் பகுதிகளும் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக இன்று (ஏப்.20) வெளியான PLOS Climate ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் நிலவும் இயல்பான வெப்பத்தைவிட அதிகமான வெப்பம் நிலவும் காலநிலையே வெப்ப அலை என வரையறுக்கப்படுகிறது. வழக்கமாக இது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீடிக்கும். பொதுவாக இந்தியாவில் மார்ச் – ஜூன் மாதங்களில் சராசரியாக வெப்ப அலை உணரப்படும். ஒவ்வொரு பருவ காலத்திலும் மூன்று அல்லது அதற்கு அதிகமான வெப்ப அலைகள் ஏற்படும்.

மத்திய மற்றும் வடமேற்கு இந்தியா மற்றும் கடலோர ஆந்திரா, ஒடிசா ஆகிய இரண்டு பகுதிகளில் வெப்ப அலை பெரும்பான்மையாக உணரப்படும். காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் காரணமாக கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்ப அலை அதிகரிக்கக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்திலுள்ள கேம்ரிட்ஜ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ரமித் டெப்நத் தனது சகாக்களுடன் செய்த ஆய்வில், காலநிலை மாற்றத்தால் உருவாகும் வெப்ப அலைகள் இந்தியாவின் நீடித்த வளர்ச்சி (எஸ்டிஜி) இலக்கை அடைவதை பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்தியா, வறுமையை ஒழித்தல், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல், வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட ஐ.நா. சபை அறிவித்துள்ள 17 நீடித்த வளர்ச்சிக்கான இலக்கினை அடைவது என உறுதி எடுத்துள்ளது.

இந்தநிலையில், காலநிலை பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றம் எவ்வாறு இந்தியாவின் நீடித்த வளர்ச்சி இலக்கினை எட்டுவதை பாதிக்கும் என்பதனை பகுப்பாய்வு செய்ய இந்தியாவின் வெப்ப குறியீடு (ஹெச்ஐ), அதன் காலநிலை பாதிப்பு குறியீடுகளை (சிவிஐ) சமூகப் பொருளாதாரம், வாழ்வாதரம் மற்றும் இயற்பியல் காரணிகள் போன்ற பல்வேறு குறியீடுகளுடன் ஒப்பிட்டனர்.

இதற்காக ஆய்வாளர்கள், தேசிய ஆவணம் மற்றும் பகுப்பாய்வு மையத்தில் பொதுத்தளத்தில் தரப்பட்டுள்ள பல்வேறு வகையிலான மாநில அளவிலான காலநிலை பாதிப்பு குறியீடுகளை எடுத்துக் கொண்டனர்.

பின்னர் அவர்கள், கடந்த 20 ஆண்டுகளில் (2001 – 2021) இந்தியாவின் முன்னேற்றத்தில் உள்ள நீடித்த வளர்ச்சி இலக்கினை, 2001 – 2021 ஆண்டுகளில் தீவிரமான காலநிலை காரணமாக ஏற்பட்ட மரணத்துடன் ஒப்பிட்டனர்.

அதில், வெப்ப அலை முன்னர் தீர்மானிக்கப்பட்ட இந்தியாவின் நீடித்த வளர்ச்சி இலக்கில் இந்தியாவின் முன்னேற்றத்தை பாதித்துள்ளது என்பதைக் கண்டறிந்தனர்

இந்த ஆய்வு, காலநிலை மாற்றம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை வெப்ப அலை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. வெப்ப அலை பாதிப்பு என்பது இந்திய துணைக்கண்டத்தில் நீண்ட காலம், மீண்டும் மீண்டும் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், இது காலநிலை வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நாட்டின் காலநிலை பாதிப்பை அளவிடும் மதிப்புகளை மறுமதிப்பீடு செய்யவேண்டிய நேரம் என்று ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.