காதல் ஜோடி ஒன்று சாயல்குடியில் இருந்து ஊட்டிக்கு பைக்கில் புறப்பட்டனர். மதுரை, ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக சென்றனர்.
பல்லடம் அருகே வந்த போது அவர்களது பைக்கை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். சிறிது தூரத்தில் திடீரென 2 பேரையும் வழிமறித்த அந்த இளைஞர் நான் போலிஸ், உங்களை பார்க்கும் போது எனக்கு சந்தேகமாக இருக்கிறது, உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை அடுத்து அந்த பெண்ணை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு, காதலன் ரோபாஸ்டனை சிறிது தூரம் அழைத்து சென்றுள்ளார்.
பிறகு அவரிம், நீ இங்கேயே இரு, நான் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்விட்டு வருகிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காதலன் உடனே காதலி நிற்குமிடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு காதலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அப்பகுதியில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனே இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த புகாரினை பெற்று கொண்ட போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்து வாலிபரை பிடிக்க உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணை கொண்டும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடத்தப்பட்ட இளம்பெண் மதுரையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரை சென்ற பல்லடம் போலீசார் இளம்பெண்ணை மீட்டனர். ஆனால் போலீசார் வருவதை அறிந்த அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.