டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வரும் ஒருவர் ஹெலிகாப்டர் அருகே நின்று ‛செல்பி’ எடுக்க முயன்றார். அப்போது ஹெலிகாப்டரின் பின்பக்கத்தில் சுழன்ற காற்றாடியின் கூரிய இறக்கைகள் அவரை வெட்டி வீசியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து பலியானார்.
இமயமலையையொட்டி உத்தரகாண்ட் மாநிலம் உள்ளது. இங்கு ஏராளமான புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து யாத்திரீகர்கள் சென்று வருகின்றனர். அட்சய திருதியை முன்னிட்டு நேற்று தான் உத்தரகாண்டில் சார் தாம் யாத்திரை தொடங்கியது.
இந்த யாத்திரை மூலம் ஏராளமான மக்கள் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரிக்கு செல்ல உள்ளனர். தற்போது வரை இந்த யாத்திரைக்கு மொத்தம் 16 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். வரும் 25ம் தேதி கேதார்நாத் மற்றும் 27 ம்தேதி பத்ரிநாத் செல்ல அனுமதி அளிக்கப்பட்டால் இந்த எண்ணிக்கை என்பது இன்னும் கூட அதிகரிக்கும்.
இதனால் உத்தரகாண்ட்டில் மீண்டும் யாத்திரீகர்கள் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. யாத்திரீகர்களின் வசதிக்காக அரசு சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஜிதேந்திர குமார் சைனி. இவர் உத்தரகாண்ட் சிவில் விமான மேம்பாட்டு கழகத்தில் நிதிப்பிரிவில் நிதி கட்டுப்பாட்டாளர் பொறுப்பில் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் தான் ஜிதேந்திர குமார் சைனி கேதார்நாத் தாம் பகுதியில் உள்ள ஹெலிபேட்டில் நின்றார். அப்போது ஹெலிகாப்டர் ஒன்று இயங்கி கொண்டிருந்தது. அப்போது அவர் ஹெலிகாப்டர் அருகே சென்று ‛செல்பி’ எடுக்க சென்றார். அப்போது ஹெலிகாப்டரின் பின்பகுதியில் உள்ள காற்றாடி சுழன்று கொண்டிருந்ததுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரில் சுழன்ற காற்றாடியின் இறக்கைகள் அவரது உடலை துளைத்தது. இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக பலியானார். நேற்று முதல் யாத்திரை தொடங்கிய நிலையில் இன்று கேதார்நாத் தாம் பகுதியில் செல்பி எடுக்க முயன்று ஹெலிகாப்டரின் இறக்கையில் சிக்கி அரசு அதிகாரி பலியாகி உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.