ஜெய்ப்பூர்: “ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை நான் காப்பாற்றியதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியிருப்பதை அரசியல் தந்திரமாகவே பார்க்கிறேன்” என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரான வசுந்தரா ராஜே சிந்தியா ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், முதல்வர் கெலாட் நேற்று ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். கடந்த 2020-ம் ஆண்டு தனது அரசை கவிழ்க்க சதி நடந்ததாகவும், அதன் பின்னணியில் அமித் ஷா இருந்ததாகவும், எனினும் எதிர்க்கட்சித் தலைவரான வசுந்தரா ராஜே சிந்தியா தனது அரசை அந்த சதியில் இருந்து காப்பாற்றியதாகவும் கூறி இருந்தார்.
இந்நிலையில், வசுந்தரா ராஜே சிந்தியா இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வீழ்ச்சியை சந்திக்க இருக்கிறது. அதை தவிர்க்க அசோக் கெலாட் மேற்கொள்ளும் தந்திரமாகவே இதனைப் பார்க்கிறேன்.
எனது வாழ்க்கையில் அசோக் கெலாட் போல் என்னை அவமானப்படுத்தியவர்கள் வேறு யாரும் கிடையாது. அப்படிப்பட்ட ஒருவரின் அரசை நான் காப்பாற்றியதாகக் கூறுவது மூர்க்கத்தனமான பொய். வரலாற்றில் இல்லாத மிகப் பெரிய தோல்வியை எதிர்கொள்ள இருப்பதால் அவர் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார். அதனால், ஏதேதோ கதைகளைக் கூறி வருகிறார். அசோக் கெலாட் எத்தகைய தந்திரங்களை செய்தாலும் அவரால் வெற்றி பெற முடியாது.
காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அமித் ஷா கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக அசோக் கெலாட் கூறி இருக்கிறார். அமித் ஷாவின் நேர்மை அனைவருக்கும் தெரியும். இருந்தும் அவரை கெலாட் குற்றம் சாட்டுகிறார். லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சட்டப்படி குற்றம். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பணம் பெற்றிருந்தால் அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும். குதிரை பேரத்தைப் பொறுத்தவரை அதில் நிபுணத்துவம் பெற்றவர் அசோக் கெலாட்தான். கடந்த 2008 மற்றும் 2018 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காதபோது தேவையான எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியவர் அவர்” என்று வசுந்தரா ராஜே சிந்தியா தெரிவித்துள்ளார்.