புவனேஸ்வர்:
ஒடிசாவில் கோரமண்டல் ரயில் உட்பட மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான பகுதியை பிரமதர் நரேந்திர மோடி தற்போது பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அப்போது அதிகாரிகளுக்கு அவர் முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலாசோர் அருகே கோர விபத்தில் சிக்கியது. பஹனபஜார் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு ரயில் கோரமண்டல் ரயில் மீது பயங்கர வேகத்தில் மோதியது.
இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டு அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன. அந்த நேரம் பார்த்து, பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் அந்த பெட்டிகள் மீது மோதியது. இதில் அந்த பெட்டிகள் நசுங்கின. இடித்த ரயிலும் அங்கேயே கவிழ்ந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு தீயணைப்புப் படையினர் சென்று மீட்புப் படையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிர் பலி வாங்கிய சிக்னல்:
தற்போது வரை 261 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 600-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களிலும், காயமடைந்தவர்களிலும் பல தமிழர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில், தவறாக கொடுக்கப்பட்ட பச்சை சிக்னலே இந்த விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
பல மாநில அமைச்சர்கள்:
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணாலிக் காட்சி மூலமாக ஒடிசா ரயில் அதிகாரிகளுடன் தகவல்களை கேட்டறிந்தார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். தமிழகத்தில் இருந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று காலை ஒடிசாவுக்கு சென்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டரில் ஒடிசா சென்று கொண்டிருக்கிறார்.
ஸ்பாட்டுக்கு சென்ற மோடி:
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் இருந்து ஒடிசாவுக்கு புறப்பட்டார். தனி விமானத்தில் புவனேஸ்வருக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் விபத்து நடந்த பஹானகா பகுதிக்கு சென்று இறங்கினார். அங்கு ஏற்கனவே இருந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அதிகாரிகள் விபத்து நடந்தது எப்படி, எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர், காயமடைந்தவர்களின் நிலைமை ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
முகம் நிறைய சோகம்:
இந்த ஆய்வின் போது பிரதமர் நரேந்திர மோடியின் முகம் மிகவும் சோகமாக இருந்தது. அவரது முகத்தில் ஒருவிதமான இறுக்கம் காணப்பட்டது. அதேபோல, கண்களிலும் கண்ணீர் தேங்கி இருந்ததை பார்க்க முடிந்தது. இதன் தொடர்ச்சியாக, விபத்தில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு சென்ற மோடி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அங்குள்ள மருத்துவர்களிடம் என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படுகிறது என்பதையும் மோடி கேட்டறிந்தார்.
அதிரடி உத்தரவு:
இந்த ஆய்வின் போது ரயில்வே உயரதிகாரிகளிடம் பேசிய மோடி, விபத்துக்கான உண்மையான காரணம் என்பது குறித்த அறிக்கையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுபோன்ற விபத்தை எதிர்காலத்தில் தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் தனி அறிக்கை தாக்கல் செய்ய மோடி உத்தரவிட்டதாக கிழக்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.