திருப்பதி: திருமலை மலைப்பாதையில் இன்று இரவில் 5 வயது சிறுவனை கடித்து குதறிய சிறுத்தை வாயில் கவ்வியபடி அவனை புதருக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்து பக்தர்கள் கூச்சலிடவே 2 போலீஸ்கார்கள் சிறுத்தையை ‛சேஸ்’ செய்து ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை பத்திரமாக மீட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திராவில் புகழ்பெற்ற திருப்பதி திருமலை கோவில் உள்ளது. தினமும் இங்கு பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆந்திரா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் திருமலை திருப்பதி மலைப்பாதையில் அடிக்கடி வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக சிறுத்தை அதிகளவில் பக்தர்களின் கண்களுக்கு தென்படும்.
இந்நிலையில் தான் இன்று அலிபிரி மலைப்பாதையின் 7 வது மைல் பகுதியில் பிரசன்ன ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே 5 வயது நிரம்பிய சிறுவன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிறுத்தை சிறுவனை ஆக்ரோஷமாக தாக்கியது. இதனால் அவன் அலறி துடித்தான். இருப்பினும் சிறுவனை சிறுத்தை விடவில்லை.
மாறாக ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை சிறுத்தை தனது வாயில் கவ்வியபடி அருகே உள்ள புதருக்குள் கொண்டு சென்றது. இதை அந்த வழியாக சென்ற பக்தர்கள், போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் இணைந்து சிறுவனை மீட்கும் வகையில் கூச்சலிட்டனர். மேலும் 2 போலீசார் சிறுத்தை தொடர்ந்து சத்தம் எழுப்பியபடி சென்றனர்.
இதில் மிரண்ட சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டது. முகம், கை, கால்களில் ரத்தம் படிந்த நிலையில் துடிதுடித்த சிறுவனை போலீசார் மற்றும் பக்தர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தித்திட்டே தாசில்தார் தர்மா ரெட்டி சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் காயமடைந்த சிறுவனின் உடல்நலம் குறித்து அவர் மருத்துவமனையில் கேட்டறிந்தார். அப்போது சிறுவனின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் திருமலையில் இன்று பெரும் பீதியை உண்டாக்கியது.
இருப்பினும் கூட பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது பாதுகாப்பு கருதி பக்தர்கள் குழுகுழுவாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் மட்டும் சிறுத்தையை கண்காணிக்கும் வகை தொடங்கி இருப்பதோடு பாதுகாப்பு பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.