மோடி அளித்த பரிசுகள்!
வெள்ளை மாளிகையில் அளிக்கப்பட்ட இரவு விருந்தின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, அழகிய சந்தனப் பெட்டியை பிரதமர் மோடி பரிசளித்தார். கர்நாடகாவின் மைசூரில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்த சந்தனப் பெட்டி மீது, மலர்கள் மற்றும் விலங்கினங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த கலை வேலைப்பாடுகளை, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கைவினை கலைஞர் செய்துள்ளார். அந்த பெட்டிக்குள், வெள்ளியில் செய்யப்பட்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதிபர் ஜோ பைடன் தன் 80வது பிறந்த நாளை அடுத்த மாதம் கொண்டாட உள்ளார். இந்திய பாரம்பரியப்படி, 80 வயது ஆனவர்கள், ‘திரிஷ்ட சஹஸ்ரசந்திரோ’ என அழைக்கப்படுகின்றனர். அதாவது, 80 ஆண்டுகள், 8 மாதங்கள் வாழ்ந்தவர், ஆயிரம் பிறைகள் கண்டவர் என, போற்றப்படுகின்றனர். அதிபர் பைடனின் வயது மற்றும் அனுபவத்துக்கு பாரம்பரிய முறையில் மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் மோடியின் பரிசு அமைந்துள்ளதாக, செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அதிபர் பைடனுக்கு மிகவும் பிடித்த அயர்லாந்து நாட்டு கவிஞர் வில்லியம் பட்லர் ஈட்ஸ், 1937ல் எழுதிய இந்திய உபநிஷத்களின் ஆங்கில மொழிபெயர்ப்பான, ‘தி டென் பிரின்சிபல் உபநிஷத்ஸ்’ என்ற நுாலின் முதல் பதிப்பையும் பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.அதோடு, அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, 7.5 காரட் பச்சை நிற வைரத்தை மோடி பரிசாக அளித்தார். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை குறிக்கும் விதமாக, 7.5 காரட் எடையில் பரிசு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.பிரதமர் நரேந்திர மோடிக்கு, 20ம் நுாற்றாண்டு துவக்கத்தில் தயாரிக்கப்பட்ட பழங்கால அமெரிக்க புத்தகம், தொன்மையான அமெரிக்க புகைப்பட கருவி, ‘கோடாக்’ கேமராவில், ஜார்ஜ் ஈஸ்ட்மேன் எடுத்த, காப்புரிமை பெற்ற முதல் புகைப்படத்தின் பிரதி, அமெரிக்க வனவிலங்கு புகைப்பட புத்தகம், கவிஞர் ராபர்ட் ப்ராஸ்ட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு ஆகியவற்றை, அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் நினைவுப் பரிசாக அளித்தனர்.
விருந்து மெனு!
வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த மிக முக்கிய விருந்தினர்கள் 400 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். பிரதமர் மோடி சைவ உணவு மட்டுமே சாப்பிடுவார் என்பதால், வெள்ளை மாளிகையின் சமையல் கலைஞர் நைனா கர்டிஸ் தலைமையில், வகை வகையான சைவ உணவுகள் பரிமாறப்பட்டன. அசைவ விரும்பிகளுக்கு மீன் மட்டும் பரிமாறப்பட்டது. உணவில் பெரும்பாலும் சிறுதானிய உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன. அவற்றை தவிர வறுக்கப்பட்ட சோளம், தர்பூசணி பழங்கள், காய்கறி சாலட், விதவிதமான சாஸ்கள் இடம் பெற்று இருந்தன.உணவு வகைகள், இந்திய மற்றும் அமெரிக்க கொடியின் வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. விருந்து நடந்த புல்வெளி பகுதி முழுதும், இந்திய தேசிய பறவையான மயிலின் வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
ஒப்பந்தம் கையெழுத்து!
அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஜி.இ., ஏரோஸ்பேஸ்’ நிறுவனம், இந்தியாவில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும், ‘ஜி.இ., 404’ வகை இன்ஜின் தான், நம் விமானப் படையின் இலகு ரக போர் விமானங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், ஜி.இ., நிறுவனத்தின், ‘எப் 414’ ரக இன்ஜின்களை, மத்திய அரசின், ‘ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.