25 வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு – ஊழியர்கள், அதிகாரிகளுக்கு பாராட்டு

சென்னை: சென்னை ஐ.சி.எஃப்-ல் 25-வது வந்தே பாரத் ரயில் நேற்று வெற்றிகரமாக தயாரித்து வழங்கப்பட்டது. வந்தே பாரத் ரயில்களை தயாரித்து நாட்டுக்கு வழங்கிய ஐ.சி.எஃப் அதிகாரிகள், ஊழியர்களை ரயில்வே துறை உயரதிகாரிகள் பாராட்டினர்.

உலகப் புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக சென்னை ஐ.சி.எஃப் (ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை) விளங்குகிறது. இங்கு 25-க்கும் மேற்பட்ட வடிவமைப்பில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறப்பு வாய்ந்த ஐ.சி.எஃப் ஆலையில் தற்போது நாட்டிலேயே அதிக வேகத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது.

முதல் வந்தே பாரத் ரயில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘ரயில் 18’ என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த ரயிலின் சேவை புதுடெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019-ம்ஆண்டு பிப்ரவரி 15-ல் தொடங்கியது. தொடர்ந்து, தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில் சென்னை-மைசூர் இடையேவும், சென்னை-கோவை இடையேவும், திருவனந்தபுரம்-காசர்கோடு இடையேவும் தலா ஒருவந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து, வந்தே பாரத் ரயில் தயாரிப்பை அதிகப்படுத்த ரயில்வே வாரியம் முடிவுசெய்துள்ளது. மேலும், மெட்ரோ வந்தே பாரத் ரயில், தூங்கும் வசதி வந்தே பாரத் ரயில், சரக்கு வந்தே பாரத் ரயில், புறநகர் வந்தே பாரத் ரயில் ஆகிய 4 வகைகளில் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ஐ.சி.எஃப்-ல் 25-வது வந்தே பாரத் ரயில் நேற்று வெற்றிகரமாக தயாரித்து வழங்கப்பட்டது. இதையடுத்து, ஐ.சி.எஃப் அதிகாரிகள், ஊழியர்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஐ.சி.எஃப் ஊழியர்களை ரயில்வே உயரதிகாரிகள் பாராட்டினர். இதுதவிர, ஐ.சிஎஃப். ஊழியர்கள், பொறியாளர்களை ஐ.சி.எஃப் பொதுமேலாளர் பி.ஜி.மால்யா வாழ்த்தினார்.

இது குறித்து ஐ.சி.எஃப் அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ஐ.சி.எஃப்-ல் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது 25 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் தயாரிப்பை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்க முடிவு செய்து உள்ளோம்.

இதுதவிர, நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. ரயில்வே துறையின் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.

2023-24-ம் உற்பத்தியாண்டில், சென்னை ஐசிஎஃப்-பில் மட்டும் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.