சென்னை: ஜப்பான் படத்தில் நடித்து வந்த கார்த்தி, தனது போர்ஷனை முடித்துவிட்டார்.
ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2வில் நடிக்கவுள்ளார் கார்த்தி.
இந்நிலையில், இளைஞர்களுக்கு அதிரடியாக கருத்து சொல்லி மாஸ் காட்டியுள்ளார்.
அதெல்லாம் வீரமே கிடையாது: பருத்தி வீரன் படத்தில் அறிமுகமான கார்த்தி, தற்போது கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார். சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் கார்த்தியின் படங்கள், மினிமம் கியாரண்டியில் வசூலை வாரி குவிக்கிறது. இதனால் பல அறிமுக இயக்குநர்களின் இரண்டாவது படங்களில் கார்த்தி தான் ஹீரோவாகிறார்.
பா ரஞ்சித்தின் இரண்டாவது படமான மெட்ராஸ், லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படம் கைதி, ஹெச் வினோத்தின் இரண்டாவது படம் தீரன் அதிகாரம் ஒன்று என கார்த்தியின் லைன்அப் எல்லாமே சூப்பர் ஹிட் அடித்துள்ளன. அதேபோல், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இந்நிலையில், தற்போது ராஜூ முருகன் இயக்கும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள ஜப்பான் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இப்படத்தின் தனது போர்ஷன் முழுவதையும் கார்த்தி முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சென்னை போலீஸ் சார்பில் மெரினாவில் நடைபெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் கார்த்தி கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி காவல் கூடுதல் ஆணையர் லோகநாதன், நடிகை ஐஸ்வர்யா, காமெடி நடிகர் மகேஷ், கானா பாலா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். அப்போது பேசிய கார்த்தி, தம் அடிப்பதோ, மது அருந்துவதோ ஸ்டைலான விசயம் கிடையாது. இளைஞர்கள் பலர் அதனை வீரம் என நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், அதெல்லாம் வீரமே கிடையாது என தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் பலர் போதை பழக்கத்திற்கு அடிமையாகுவது சக மாணவர்களிடம் இருந்து தான் உருவாகிறது. இதுபற்றி மாணவர்களின் பெற்றோர்களுக்கு கூட தெரியவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விட்டது வருத்தமாக உள்ளது. நாம் பயன்படுத்தும் ஒயிட்னர் கூட போதை பொருள் என சொல்கிறார்கள். இவையனைத்தும் பள்ளி அருகில் விற்பனை செய்யப்படுகிறது. அனைவரும் ஒன்றிணைந்தால் போதைப் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும். இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்தை செலுத்தினால் நன்றாக இருக்கும் என்றார். கார்த்தி இதுவரை தனது படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.