திருவண்ணாமலை:
இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ் வாங்க ஆசைப்பட்ட இளைஞர் ஒருவர், தனக்கு நீச்சல் தெரியாததை கூட மறந்து கிணற்றுக்குள் குதித்து உயிரை விட்ட பரிதாப சம்பவம் திருவண்ணாமலையில் நடந்திருக்கிறது.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் செல்போன் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. காலை எழுந்தது முதல் நள்ளிரவு தூங்கும் வரை ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை போல செல்போனும், கையுமாகவே இளைஞர்கள் சுற்றுகின்றனர்.
மேலும், சினிமா வசனங்களுக்கு வாய் அசைத்து ரீல்ஸ் போடுவதும், ஆபத்தான பைக் சாகசங்களை செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதையுமே முழுநேர வேலையாக பல இளைஞர் செய்து வருகின்றனர். இதில் சில நேரங்களில் பெரிய விபரீதங்களும் ஏற்படுவது உண்டு. அப்படியொரு சம்பவம்தான் திருவண்ணாமலையில் நடந்திருக்கிறது.
ரீல்ஸ் மோகம்:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. சென்னையில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்யும் இவருக்கு சச்சின், சரண் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் சரண் (23) என்பவர் தனியார் மருந்து நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தினமும் சினிமா பாடல்களுக்கு ஆடி பாடி ரீல்ஸ் வீடியோக்களை செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
எமனாக அழைத்த கிணறு:
இந்நிலையில், கடந்த வாரம் அவர்களின் கிராமமான கரிப்பூருக்கு ஒரு விசேஷத்துக்காக குடும்பத்தினர் அனைவரும் சென்றிருந்தனர். அப்போது சரண், தனது நண்பனான ரமேஷையும் உடன் அழைத்து சென்றார். இந்த சூழலில், கடந்த சனிக்கிழமை சரணும், ரமேஷும் ஊரை சுற்றிப்பார்க்க சென்றனர். அப்போது அங்கு ஒரு பெரிய கிணறு இருந்துள்ளது. கிணற்றை பார்த்ததும் சரணுக்கு ரீல்ஸ் வீடியோ செய்ய ஆசை ஏற்பட்டது.
நீச்சலே தெரியதா?
கிணற்றில் டைவ் அடித்து குதித்தால் நிறைய லைக்ஸ் வரும் என நினைத்த அவர், ரமேஷிடம் செல்போனில் வீடியோ எடுக்குமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து, உடைகளை களைந்த சரண், உள்ளாடையுடன் டைவ் அடித்து கிணற்றுக்குள் குதித்திருக்கிறார். ஆனால் அடுத்த நொடியே அவர் தண்ணீருக்குள் மூழ்கி திணறியுள்ளார். இதை பார்த்த ரமேஷ், நீச்சலடித்து மேலே வா எனக் கூற, நீச்சல் தெரியாது எனக் கத்தியுள்ளார்.
லைக்ஸுக்கு ஆசைப்பட்டு..:
ரமேஷுக்கும் நீச்சல் தெரியாததால் அவராலும் சரணை காப்பாற்ற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புப் படையினர் வந்து சரணின் உடலை மீட்டனர். முன்பின் தெரியாத, முகம் அறியாதவர்களில் லைக்ஸுகளுக்கு ஆசைப்பட்டு விபரீத செயல்களில் ஈடுபடுவோருக்கும் இந்த சம்பவம் நல்ல பாடமாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.