சென்னை:
திரைப்பட நடிகர் தாமுவின் பேச்சை கேட்டு சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தேம்பி தேம்பி அழுத வீடியோ ஒன்றுதான் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அப்படி என்னதான் பேசினார் தாமு? வாங்க பார்க்கலாம்.
திரைப்படங்களில் நடிகர்கள் ஏற்கும் கதாபாத்திரங்களை வைத்து அவர்களின் உண்மையான கேரக்டரை நாம் எடைபோட முடியாது. இதற்கு எவ்வளவோ உதாரணங்கள் இருக்கின்றன. மிக மூர்க்கத்தனமான வில்லனாக படங்களில் நடித்த நம்பியார், நிஜ வாழ்வில் ஒரு சாந்த சொரூபி. தனது முக பாவங்களாலும், கோமாளித்தனமான நடிப்பாலும் உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்லின், நிஜ வாழ்வில் மிக மிக சீரியஸான மனிதர். இப்படி இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்.
அப்படிப்பட்ட ஒருவர்தான் நடிகர் தாமு. திரைப்படங்களில் தன்னை ஒரு கோமாளி போல காட்டிக்கொள்ளும் தாமு நிஜ வாழ்க்கையில் ஒரு சிறந்த சமூக சேவகர். ஏழை மாணவர்களின் கல்விக்காகவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் பல உதவிகளை செய்து வருபவர். இதற்காக அவர் பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். அதேபோல பள்ளி, கல்லூரி மாணவர்கள் தவறான வழியில் செல்வதை தடுக்க தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தாமு, மாணவர்களிடம் நகைச்சுவையாக பேசி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். தாமுவின் நகைச்சுவை பேச்சை கேட்டு ஆர்ப்பரித்து சிரித்த மாணவர்கள், இன்னும் சிறிது நேரத்தில் நாம் கதறி அழப்போகிறாம் என நிச்சயம் நினைத்திருக்க மாட்டார்கள்.
மாணவர்களிடம் பேசிய தாமு, ஒரு நிமிடம் கண்களை மூடுமாறு கூறினார். அப்போது அவர், மாணவர்கள் பெற்றோர்களை ஏமாற்றுவது குறித்து அவர்கள் பேசுவது போலவே பேசினார். “எனக்காக தானே எங்க அம்மா அப்பா கஷ்டப்படுறாங்க. ஆனா நான் அவங்கள தினம் தினம் ஏமாத்துறேனே. நான் சாப்பிடலைனா என் அம்மா பட்டினியாக கிடப்பாங்க. ஆனால் அந்த தெய்வத்தை மறந்துட்டு நேத்து வந்த நண்பனுடன் சேர்ந்துட்டு பல தப்புகள பண்றேனே. இத்தன கஷ்டத்திலேயேயும் நான் நல்லா இருக்கணும்னுதானே அவங்க உழைக்கிறாங்க. ஆனா நான் படிக்காமே ஊர் சுத்துறனே..” என தாமு தழுதழுத்த குரலில் பேச, மாணவர்கள் தேம்பி தேம்பி அழத் தொடங்கினார்கள்.
“இன்னைக்கே போங்க.. உங்க அம்மா கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்க. அப்பாவ கட்டிப்பிடிச்சு அழுங்க. இன்னும் எத்தன நாள் அவங்க இருக்க போறாங்க..” என தாமு சொல்ல, அரும்பு மீசை முளைத்த கல்லூரி மாணவர்கள் சிறு குழந்தைகளாக மாறி கதறி அழத் தொடங்கினார்கள்.
வாழ்க்கையில் பெரும் தவறுகளை செய்து திருந்தியவர்கள், வாழ்க்கையில் வெற்றியாளர்களாக இருப்பவர்கள் என அனைவருக்குமே ஏதோ ஒரு தருணம்தான் அவர்கள் வாழ்வை மாற்றியது என்று சொல்வார்கள். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு தாமுவின் பேச்சு அப்படியொரு தருணமாக இருக்கும் என்பது அவர்களின் முகத்தை பார்க்கும் போது தெரிந்தது.