மகாராஷ்டிராவில் சிவசேனா கடந்த ஆண்டு, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரண்டாக உடைந்த சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து தொண்டர்கள் இன்னும் வெளியில் வராமல் இருக்கும் சூழ்நிலையில், மீண்டும் அது போன்ற ஒரு நிகழ்வு மகாராஷ்டிரா அரசியலில் நடந்தேறியிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருக்கும் சரத் பவார், கடந்த 1999-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சொந்தமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவருக்கு அவரின் அண்ணன் மகன் அஜித் பவார் நிழலாக இருந்து கட்சியின் செயல்பாடுகளை கவனித்துக்கொண்டார். கட்சியின் அடிமட்டத்தொண்டர்களுடன் நெருங்கிய நட்பு வைத்திருந்தார். எனவேதான் அஜித் பவாருக்கு சரத் பவார் பல முறை துணை முதல்வர் பதவி கொடுத்து கெளரவித்தார்.

ஆனாலும் கடந்த 2019-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சியமைப்பதில் சரத் பவாருக்கும், அஜித் பவாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்த நேரத்தில் சிவசேனா பா.ஜ.க.வுடன் முதல்வர் பதவிக்காக மோதிக்கொண்டிருந்தது. உடனே பா.ஜ.க.வுடன் சேர்ந்து ஆட்சியமைக்கவேண்டும் என்று அஜித் பவார் விரும்பினார். ஆனால் சரத் பவார் அதனை விரும்பவில்லை. இதனால் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிகாலையில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக, அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
ஆனாலும் அது சில நாள்களே நீடித்தது. அவ்வாறு பதவியேற்றதில் இருந்து அஜித் பவாரையும், அவரது மகன் பார்த் பவாரையும் சரத் பவார் ஒரேடியாக ஓரங்கட்ட ஆரம்பித்தார். இதனை ஜீரணித்துக்கொள்ள முடியாத அஜித் பவார் கட்சியை கைப்பற்றுவதற்கான வேலையில் இறங்கினார். கடந்த மூன்று ஆண்டுகள் முயற்சி செய்து இப்போது கட்சியை உடைத்து இரண்டாவது முறையாக சரத் பவாரை எதிர்த்துக்கொண்டு பா.ஜ.க.வுடன் அஜித்பவார் ஆட்சியில் இணைந்துள்ளார்.

சரத் பவாரிடம் அரசியல் கற்றுக்கொண்டு, இப்போது சரத் பவாரின் கட்சியையே தன் வசப்படுத்த துணிந்திருக்கும் அஜித் பவார் தனது தந்தையின் திடீர் மரணத்தால் பள்ளிப்படிப்பை கைவிட்டுவிட்டு குடும்ப பொறுப்பை கையில் எடுத்தவர். 1982-ம் ஆண்டு சர்க்கரை ஆலை கூட்டுறவு சங்கத்தில் சாதாரண உறுப்பினராக இணைந்து தனது பொது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு 1991-ம் ஆண்டு புனே மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராக பதவியேற்று அந்த பதவியில் தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் இருந்தார்.
1991-ம் ஆண்டு சரத் பவாரின் துணையோடு காங்கிரஸ் கட்சி சார்பாக பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் சரத் பவாருக்காக அஜித் பவார் தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அஜித் பவார் டெல்லியை பற்றி நினைத்துப் பார்க்கவே இல்லை. மாநில அரசியலில் தீவிரம் காட்டினார். அவருக்கு சரத் பவார் துணை இருந்ததால், அவரின் வளர்ச்சியில் யாரும் குறுக்கிட முடியவில்லை. 1995-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக பாராமதி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் 5வது முறையாக இப்போது துணை முதல்வராக பதவியேற்று இருக்கிறார். சிறந்த நிர்வாகியாக கருதப்படும் அஜித் பவார் அமைச்சரவையில் நிதி, நீர்ப்பாசனம் உட்பட முக்கிய துறைகளில் கேபினட் அமைச்சராக பதவி வகித்து வகித்து இருக்கிறார்.

1999-ம் ஆண்டு தனது 40வது வயதில் முதல் முறையாக கேபினட் அமைச்சராக பதவியேற்றார். அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் துணைமுதல்வராக பதவி வகித்தார். 2014-ம் ஆண்டு அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் நீர்ப்பாசன துறையில் அஜித் பவார் 70 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக அனைத்து விசாரணை ஏஜென்சிகளும் விசாரித்தன. இறுதியில் அஜித் பவார் பெயர் இந்த ஊழலில் இருந்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறையால் 2019-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டது.
அதன் பிறகு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழலில் அஜித் பவார் மற்றும் அவரது மனைவி பெயர் இருந்தது. அதனையும் கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கப்பிரிவு நீக்கிவிட்டது. அதன் பிறகுதான் அஜித் பவாருக்கு பா.ஜ.க.வுடன் நெருக்கம் மேலும் அதிகரித்தது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.