எயார் சீஷெல்ஸ் நேரடி விமான சேவை மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை வளர்ச்சி

கொழும்பிற்கு எயார் சீஷெல்ஸ் நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் துரித வளர்ச்சி ஏற்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய சீஷெல்ஸ் உயர் ஸ்தானிகர் லலதியானா அக்குச்சே நேற்று முன்தினம் (03) அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

கண்டியில் நடைபெற்ற ஒரு விசேட நிகழ்வில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நற்சான்றுப் பத்திரத்தை வழங்கிய பின்னர் எல்ல மற்றும் கண்டி பிரதேசங்களுக்கு விஜயம் செய்ததன் பின்னர் இலங்கையின் அழகில் தான் வியந்து போனதாக திருமதி அக்குச்சே இதன்போது தெரிவித்தார். நீதிபதிகள், பொறியியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற கணிசமான எண்ணிக்கையிலான இலங்கை தொழில் வல்லுநர்கள் சீஷெல்ஸில் பணிபுரிவதாகவும் அவர்களின் சேவைகள் தங்கள் நாட்டினால் மிகவும் மதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். தாதியர் மற்றும் சுகாதார சேவைகள் போன்ற ஏனைய துறைகளில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் உயர் ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டார்.

சீஷெல்ஸிலிருந்து கொழும்பு நோக்கிப் பறக்கும் ’எயார் சீஷெல்ஸ்’ விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும் சம்பிரதாய நிகழ்வுகளுடன் வரவேற்கப்பட்டதுடன், கண்டிய பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் விருந்தினர்களை வரவேற்கும் விழாவும் இடம்பெற்றது. இலங்கையின் தனித்துவமான விருந்தோம்பலை எடுத்துரைக்கும் வண்ணமயமான நடன நிகழ்ச்சியுடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர்.

வாராந்தம் இரண்டு விமான சேவைகள் இடம்பெறும் எனவும், இது சுற்றுலா மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் எனவும் உயர் ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த முயற்சியானது தனித்துவமான சுற்றுலாத் தலமாக இலங்கையின் நிலையைப் பற்றிய அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், இருதரப்பு மற்றும் வர்த்தகப் பங்குடைமையை மேலும் மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக உயர் ஸ்தானிகர் கூறினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.