இலங்கையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆட்சேர்ப்புக்கான போட்டி பரீட்சைகள் பிற்போடப்பட்டதன் காரணமாக 41 இலட்சம் பாடசாலை மாணவர்கள் அநீதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, போட்டி பரீட்சையை விரைவில் நடத்தி தரமான குழந்தைகளை உருவாக்க உறுதுணைபுரியுங்கள் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் நேற்று (5) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்…
கொவிட் தொற்று காரணமாக இலங்கையில் 41 இலட்சம் பாடசாலை மாணவர்கள் கல்வியை இழந்துள்ளனர்.
யுனிசெப் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நடத்திய கணக்கெடுப்பின்படி, தரம் 3 இல் கல்வி கற்கும் குழந்தைகளின் எழுத்து மற்றும் வாசிப்புத் திறன் 14 வீதமாகியுள்ளது. ஆரம்பப் பிரிவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகும். அதே நேரம் கோவிட் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதும் மற்றொரு காரணமாகும்.
தற்போது வெறும் 9000 அதிபர்கள் மட்டுமே பாடசாலைகளில் உள்ளனர். கடந்த டிசம்பரில் ஏராளமான அதிபர்கள் ஓய்வு பெற்றார்கள், ஆனால் இதுவரை 4500 அதிபர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பவே முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்று நான் வரும்போது பல பாடசாலைகளில் ஆர்பாட்டங்கள், அதிபர்கள் இல்லை. ஆனால் நாம் நீதிமன்ற உத்தரவையும் மதிக்க வேண்டும். அதே நேரம் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. தயவுசெய்து இவ் வழக்குகளை விரைவில் தீர்த்து வைக்கவும். குழந்தைகளின் உரிமைகள் பற்றி யாரும் கதைப்பதில்லை.
ஆசிரியர் பணிக்கான போட்டிப் பரீட்சை மார்ச் 25ம் திததி நடைபெற இருந்தது ஆனால் இது தொடர்பாக ஒரு குழுவினர் உச்ச நீதிமன்றுக்கு சென்றனர். ஆனால் அந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. நான் அதற்கு மதிப்பளிக்கிறேன்.
ஆனால் மீண்டும் ஒரு குழு நீதிமன்றத்திற்கு சென்றதால் இதுவரை பரீட்சைகளை நடத்த முடியவில்லை. நாம் இந்த 26,000 பேரையும் ஆசிரியர் சேவைக்குள் உட்படுத்தி ஓராண்டு பயிற்சி அளித்து முதுகலைப் பட்டப் படிப்பை மேற்கொள்ள தீர்மானித்திருந்தோம், ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. கடந்த டிசம்பரில், ஏராளமான ஆசிரியர்கள் ஓய்வு பெற்றனர். ஆரசாங்க சேவையில் உள்ளவர்களை ஆசிரியர் சேவையில்; இணைத்துக் கொண்டால், திரைசேரியில் இருந்து பணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், இதனால் உண்மையிலேயே பாதிக்கப்படுவது மனுதாரர்கள் அல்ல அப்பாவி குழந்தைகள் தான். எனவே குறிப்பிட்ட விடயம் தொடர்பில் விரைவில் ஒரு தீர்மானத்தினை எட்டுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.