சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்.
கடந்த வாரம் வெளியான மாவீரன் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில், இப்படத்திற்காக ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் சிவகார்த்திகேயன் ரகசியமாக சந்தித்துள்ளாராம்.
ரஜினி, கமலிடம் சென்ற சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீசாகிறது. பிரின்ஸ் படத்தைத் தொடர்ந்து மாவீரனும் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது. இதனால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக மிஷ்கினும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாவீரன் படத்தில் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் இருப்பதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் வெளியான மாவீரன் ட்ரெய்லர் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில், தற்போது மிஷ்கினும் ஹைப் கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் ஆரம்பத்தில் கதை குறித்து வாய்ஸ் ஓவர் கொடுப்பதற்காக முதலில் கமல்ஹாசனை அணுகியுள்ளது படக்குழு.
ஆனால், அவர் இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே படங்களில் பிஸியாக இருப்பதால், வாய்ஸ் ஓவர் கொடுக்க முடியாமல் போய்விட்டதாம். முன்னதாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படங்களுக்கு கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தது குறிப்பிட்டத்தக்கது. கமல் நோ சொன்னதால், மாவீரன் வாய்ஸ் ஓவர்-காக சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் சிவகார்த்திகேயனும் படக்குழுவினரும் கேட்டுப் பார்த்துள்ளனர்.
கமல்ஹாசனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாரும் கை விரித்து விட்டாராம். மாவீரன் டைட்டிலில் ரஜினியும் ஒரு படம் நடித்துள்ளார். அதனால் தான் சூப்பர் ஸ்டாரிடமும் கேட்டுப் பார்த்துள்ளனர். இருந்தாலும் இந்த முயற்சியை கைவிடாத சிவகார்த்திகேயன் கடைசியாக இன்னொரு பிரபலத்தை பிடித்துவிட்டாராம். ஆனால், அவர் யார் என்பதை சொல்ல மறுத்துவிட்டார் மிஷ்கின்.
மாவீரன் திரைப்படம் வெளியாகும் போது, இந்த வாய்ஸ் ஓவர் வெறித்தனமாக இருக்கும் எனவும் மிஷ்கின் கூறியுள்ளார். இதனால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இதனிடையே இந்த தகவல் குறித்து டிவிட்டரில் கமெண்ட்ஸ் செய்து வரும் நெட்டிசன்கள், வாய்ஸ் ஓவர் என்றால் அது கெளதம் மேனனாக இருக்குமோ என ட்ரோல் செய்து வருகின்றனர். ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள மாவீரன், ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்ஸாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.