ஆவின் பால் விற்பனை: திடீர் ஆய்வு- நுகர்வோர்களுக்கு போன் போட்ட அமைச்சர்!

தமிழ்நாடு அமைச்சரவை அண்மையில் மாற்றபப்ட்ட போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் பால்வளத்துறைக்கு மாற்றப்பட்டார். நிதியமைச்சராக பதவி வகித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில் நுட்பத்துறைக்க்கு மாற்றப்பட்டார்.

பால்வளத்துறை அமைச்சராக இதற்கு முன் பணியாற்றிய ஆவடி நாசர் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த முதல்வர் ஸ்டாலின் அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கினார் என்று கூறப்பட்டது. பால்வளத்துறையிலும் பல்வேறு குளறுபடிகள், விமர்சனங்கள் வந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் மனோ தங்கராஜுக்க்கு இத்துறை சவாலானதாகவே இருக்கும் என்கிறார்கள்.

ஆவினுக்கு போட்டியாக தனியார் நிறுவனங்களும், அமுல் போன்ற பிற மாநில நிறுவனங்களும் தமிழ்நாட்டில் கொள்முதலை தீவிரப்படுத்தியுள்ளன. எனவே ஆவின் நிறுவனம் இலக்கு நிர்ணயித்து கொள்முதலை அதிகரித்து வருகிறது.

பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை ஏற்ற சொல்லும் அதே நேரத்தில் ஆவின் பொருள்களின் விலை உயர்வால் நுகர்வோர்களும் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதனால் அனைத்து தரப்பையும் சரிகட்டி பால்வளத்துறையை சிறப்பாக வழிநடத்தும் பொறுப்பு அமைச்சர் மனோ தங்கராஜுக்கு உள்ளது.

எனவே அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று (ஜூலை 7) தி.நகர் மண்டல அலுவலக வாயிலில் உள்ள ஆவின் விற்பனை நிலையத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். அங்கு வந்த வாடிக்கையாளர்களிடம் ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் குறித்த கருத்தை கேட்டறிந்தார்.

பலசரக்கு குடோன்களில் அலுவலர் சிவக்குமார் திடீர் ஆய்வு செய்தார்

ஆவின் தி.நகர் மண்டல அலுவலகத்தை ஆய்வு செய்து, அங்கு மாதந்திர பால் அட்டை விற்பனை குறித்து விரிவாக ஆய்வு நடத்தி, நுகர்வோர்களிடம் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பால் அட்டை புதுப்பித்தல் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கும் சலுகையானது சரியான நுகர்வோர்களுக்கு சென்றடைகிறதா என்பதையும் உறுதி செய்தார்.

பின்னர், அமைச்சர் மனோ தங்கராஜ் தி.நகர் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் (MCCS) சென்று மாதாந்திர பால் அட்டை விற்பனை மற்றும் அதற்கு பெறப்படும் அடையாள அட்டை நகல்களை ஆய்வு செய்தார்.

பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் மூலம் மாதாந்திர பால் அட்டைகள் விற்பனை மற்றும் அதன் பயனாளர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இம்மாதாந்திர பால் அட்டை நடைமுறையை எளிமைப்படுத்துவதற்கும், இணைய வழியாக பால் அட்டை விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது ஆவின் விற்பனைப் பிரிவு, அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.