வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது குறித்து முடிவு செய்ய அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையில் குழு ஒன்றை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைத்து உள்ளார்.
இந்திய மண்ணில் 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்., 5 — நவ., 19 ல் நடக்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்., 15 ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மோடி மைதானத்தில் நடக்க உள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றம் காரணமாக, பாகிஸ்தான் அரசின் அனுமதி கிடைத்தால் மட்டுமே தங்களது அணி இந்தியா செல்லும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது. பாகிஸ்தான் அணி விளையாடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையில் குழு ஒன்றை அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைத்துள்ளார். இந்த குழுவில், விளையாட்டுத்துறை அமைச்சர் அசன் மஜாரி, மரியம் அவுரங்கசீப், ஆசாத் மெக்மூத், அமீன் உல்ஹக், குமர் ஜமான் கரியா மற்றும் முன்னாள் தூதரக அதிகாரி தாரீக் பத்மி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவானது, இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவு, பாகிஸ்தான் வீரர்கள், ரசிகர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, அது குறித்து ஆலோசனை நடத்தி பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement