நூற்றாண்டை நெருங்கும் ‘ஆனந்த விகடன்’ வார இதழில் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் அ.வெண்ணிலாவின் ‘நீரதிகாரம்’ தொடர் நூறாவது அத்தியாயத்தை எட்டியிருக்கிறது. இந்த மைல்கல்லை கொண்டாடும் வகையில் விகடன் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில், கவிஞர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, திரைப்பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி இராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு எழுத்தாளர் அ.வெண்ணிலா மற்றும் ஓவியர் ஷ்யாம் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்து நீரதிகாரம் பற்றி நெகிழ்ச்சியாக பல விஷயங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

ஆரம்பத்திலேயே மேடையேறிய தேனி ஈஸ்வர் ‘நீரதிகாரம்’ படைத்த அ.வெண்ணிலாவுக்கு சுருக்கமாகவும் நெகிழ்ச்சியாகவும் வாழ்த்துச் சொல்லி விடைபெற்றார். பின்பு பேசிய கவிஞர் மனுஷ்யபுத்திரன், ‘படைப்பாளிகளுக்கு விகடன் கொடுத்ததை போன்ற சுதந்திரத்தை வேறு எந்த இதழும் கொடுத்ததில்லை. தமிழ் எழுத்துலகில் ஒரு ட்ரெண்ட் செட்டராக விகடன் எப்போதும் இருந்திருக்கிறது. நீரதிகாரம் என்கிற மிகப்பெரிய சவாலை கையில் எடுத்துக் கொண்டு சாதித்திருக்கிறார் வெண்ணிலா. மிகப்பெரிய கனவோடும் விடாமுயற்சியோடும் இதை சாத்தியப்படுத்தியிருக்கும் எழுத்தாளர் வெண்ணிலா அனைவருக்குமான முன்னுதாரணம்.

இந்திய சமூகத்தை நவீன சமூகமாக மாற்றியதில் ஆங்கிலேயர்களுக்கு பெரிய பங்கிருக்கிறது. ஆங்கிலேயர்களால் ஒடுக்கப்பட்ட கதைகளைத்தான் வரலாறாக எழுதியிருக்கிறார்கள். ‘நீரதிகாரம்’ அதிலிருந்து மாறுபட்டது. பென்னி குக் செய்தது ஒரு அரசியல் செயல்பாடு. அ.வெண்ணிலா எழுதியிருப்பது ஒரு மாற்று வரலாறு.’ என்றார் மனுஷ்.
‘முல்லை பெரியாறு அணை பற்றி முதலில் என்னிடமும் வெண்ணிலா அவர்களிடமும் 10 பக்கங்கள் வாங்கினார்கள். அதில் வெற்றி பெற்று வெண்ணிலா நீரதிகாரம் தொடரை எழுதினார். நான் எழுதியிருந்தாலும் இத்தனை வாரங்கள் சென்றிருக்காது,வெண்ணிலா அதை நிகழ்த்தியிருக்கிறார்.

விகடனில் வெளிவந்த மிகப்பெரிய தொடர் இதுவாக தான் இருக்கும்’ என தான் தவறவிட்ட வாய்ப்பைப் பற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி இராஜேந்திரன் பகிர்ந்துகொண்டார்.
‘மிகப்பெரிய கனவு கண்டவர்கள் தான் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.அப்படி சாதனையை நிகழ்த்தியவர் தான் பென்னி குக்.கனவும் கற்பனையும் தான் நம் வாழ்வை முன்னோக்கி கொண்டுச் செல்லும். வெண்ணிலாவுக்கும் விகடனுக்கும் வாழ்த்துகள்.’ என்றார் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி.
‘எஸ்.எஸ்.வாசன் ஒரு சகாப்தம். வாசன் பத்திரிகை உலகின் முன்னோடி. விகடன் பத்திரிகை உலகின் ஆலமரம். தமிழிலக்கியம் பல கூறுகளைக் கொண்டது. அணை பற்றிய இலக்கியத்தை வெண்ணிலா தமிழில் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் அடுத்து என்ன என்கிற பரபரப்பும் விறுவிறுப்பும் தொற்றிக்கொள்ளும். சில அத்தியாயங்களின் முடிவில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். இங்கிலாந்து வரை சென்று பென்னி குக் தொடர்பாக பல தகவல் சேகரித்து இந்த தொடரை எழுதியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.’ என்றார் 97 வயதான ஆனந்த விகடன் வாசகர் ஆ.ம.ஜெகதீசன்
‘நீரதிகாரத்தை வாசிக்கும் முன் பென்னி குக் பற்றியும் முல்லைப் பெரியாறு பற்றியும் ஒரு சில விஷயங்கள்தான் தெரியும். ஆனால், இப்போது அப்படியில்லை. ஒரு தாவரவியல் பேராசிரியராக தாவரங்கள் சார்ந்து எக்கச்சக்க தகவல்கள் இந்தத் தொடர் மூலம் எனக்குக் கிடைத்தது. ஆவணக்காப்பகத்தில் வெண்ணிலாவை பார்த்த போது லட்சக்கணக்கான ஆவண தாள்களில் ஒரு தாளாகத்தான் வெண்ணிலா தெரிந்தார்.

அந்தளவுக்கு கடின உழைப்பையும் நேரத்தையும் வெண்ணிலா இதற்காக செலவிட்டிருக்கிறார். ஷ்யாமின் ஓவியங்களும் நாவலுக்கு வலுவூட்டக்கூடியதாக இருந்தது.’ என்றார் வாசகியும் பேராசிரியருமான லோகமாதேவி.

‘முல்லைப் பெரியாறு பற்றிய தொடரின் 100 வது அத்தியாயத்திற்கான விழாவில் கலந்துகொள்ள முல்லைப் பெரியாற்று பகுதியிலிருந்தே வந்திருக்கிறேன்.’ என நெகிழ்ச்சியாக கூறினார் வாசகர் தமிழ்ச்செல்வன்.
இராஜராஜ சோழனின் வரலாற்றை எழுதுவது பெரிதல்ல. நீரை வேண்டி நிற்கும் மாந்தர்களின் கதையை எழுதுவதுதான் பெரிது. அதற்காகவே விகடனும் வெண்ணிலாவும் வரலாற்றில் நிற்பார்கள்.

நீரதிகாரம்’ 50 வது அத்தியாயத்தை எட்டியபோதே வெண்ணிலாவின் விரல்களில் முத்தம் கொடுத்து ‘நீ வரலாற்றில் நிற்கப் போகிறாய்’ என்றேன்.’ என்றார் வாசகியும் எழுத்தாளர் வெண்ணிலாவின் தோழியுமான ‘சாந்தகுமாரி’
‘நீரதிகாரம்’ தொடருக்கு தன்னுடைய ஓவியங்கள் மூலம் உயிரூட்டிய ஓவியர் ஷ்யாம் பேசுகையில், ‘நான் தண்ணீரை தொட்டு தண்ணீரை வரைவேன். பென்னி குக்கின் தண்ணீரை வைத்து வெண்ணிலா தொடர் எழுதியிருக்கிறார்.

விரைவில் இதை சினிமாவாக எடுப்பார்கள் என்ற எண்ணத்ததிலேயே யோகி பாபு, திரிஷா போன்ற நடிகர்களை மனதில் வைத்து ஓவியங்களை வரைந்தேன். விகடனுக்காக 30 வருடங்களாக நாவல்கள், தொடர்கதைகளுக்காக படங்கள் வரைந்து கொண்டிருக்கிறேன். நீரதிகாரம் எனக்குக் கிடைத்த கொடுப்பினை. இப்படி ஒரு தொடருக்கு படம் வரைந்ததில் பெருமிதம் கொள்கிறேன்.’ என்றார் ஷ்யாம்.
‘வேள்பாரி முடிந்த பிறகு ஒரு தொடர் ஆரம்பிக்க நினைத்தோம். அந்த சமயத்தில் வெண்ணிலா இரண்டு நாவல்களுக்கான முன்கதையோடு வந்தார். அதில், பென்னி குக் பற்றி மேலோட்டமான தகவல்கள் மட்டுமே நமக்கு தெரியும் என்பதால் முல்லைப் பெரியாறு பற்றிய அந்தத் தொடரை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். தொடர்ந்து வெண்ணிலாவும் நீரதிகாரத்தை தொடங்கிவிட்டார்.’ என ‘நீரதிகாரம் தொடங்கப்பட்டதன் பின்னணி கதையை சுவாரஸ்யமாக கூறினார் ஆனந்த விகடனின் இதழாசிரியர் சுகுணா திவாகர்.

‘வெள்ளையர்கள் பற்றி பலருக்கும் வெறுப்பு எண்ணம் தான் முதன்மையாக இருக்கும். என்னுடைய இந்த மாற்று எண்ணத்திற்கு இந்தியா தேசத்தில் வெள்ளையர்கள் செய்த அடிப்படை கட்டுமானம் போன்ற பணிகள் தான் காரணம். நீரதிகாரம் தொடரை ஒரு 25 வாரத்தில் எனக்கு தெரிந்த விஷயங்களை வைத்து எழுதி முடித்திருக்க முடியும். ஆனால், முல்லைப் பெரியாறு பற்றியும் பென்னி குக் பற்றியும் இங்கே தவறான பொய்யான பல கதைகள் இங்கே உலாவிக் கொண்டிருக்கிறது. என்னுடைய நாவல்களில் வரலாறு சார்ந்த தவறுகளை தவிர்க்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பேன். ஆவணங்களின் வழியாக மட்டும்தான் உண்மையான வரலாற்றை எழுத முடியும் என்று நம்பியே இந்த ‘நீரதிகாரம்’ பயணத்தைத் தொடங்கினேன்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியபோது உயிரிழந்த 19 பிரிட்டிஷ் அதிகாரிகளின் கல்லறைகளில் பெயர் இருக்கிறது. ஆனால், அணை கட்டும்போது உயிரைவிட்ட 5,000 தமிழர்களின் பெயர் எங்குமே இல்லை. அத்தனை மனிதர்களின் தியாகத்தால்தான் இந்த அணை கட்டப்பட்டிருக்கிறது.
தொடர்கதை எனும் போது அதற்கென சில நியாயங்களை செய்ய வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யத்திற்காகவும் திருப்பத்திற்காகவும் சில விஷயங்களை சேர்க்க வேண்டியிருக்கும். ஆனால், விகடன் என்னை அப்படி நிர்பந்தித்ததே இல்லை. என்னுடைய எழுத்தில் எந்தவிதத்திலும் விகடனின் ஆசிரியர் குழு தலையிட்டதில்லை. அவர்கள் கொடுத்த சுதந்திரம்தான் ‘நீரதிகாரம்’ இத்தனைச் சிறப்பாக வந்ததற்கு காரணம்.’ என ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு நன்றி சொல்லி விடைபெற்றார் எழுத்தாளர் அ.வெண்ணிலா.

வாசகர்களுடன் இணைந்து எழுத்தாளர் வெண்ணிலா ‘நீரதிகாரம்’ தொடரின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாட இனிமையாக நடந்து முடிந்தது ‘நீரதிகாரம்100’ நிகழ்வு.