புதுடெல்லி: டெல்லி நகருக்குள் யமுனை நதி நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் “இங்கு எதுவும் இலவசம் இல்லை… இதுதான் விலை” என்று கேஜ்ரிவால் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு ஆம் ஆத்மியின் பிரியங்கா கக்கர் பதிலடி தந்துள்ளார்.
ஆம் ஆத்மி – பாஜக வார்த்தை போர்: டெல்லியில் யமுனை நதியின் வெள்ளம் புதன்கிழமை வரலாறு காணாத அளவில் உயர்ந்து ஓடியது. வியாழக்கிழமை காலையில் தாழ்வான பகுதிகளைத் தாண்டி, ஐடிஓ, சிவில் லைன்ஸ், தலைமைச் செயலகம் உட்பட முக்கியப் பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. இது குறித்து பாஜக மற்றும் ஆளும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே புதிய வார்த்தைப் போர் தொடங்கியுள்ளது.
ஹரியாணா அரசு யமுனையில் தண்ணீர் திறந்து விட்டது குறித்து ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் “எதுவும் இலவசம் இல்லை… இதுதான் விலை” என்று கேஜ்ரிவால் அரசை சாடியுள்ளார்.
எதுவும் இலவசம் இல்லை: டெல்லியின் தற்போதைய நிலை குறித்து பாஜக எம்.பி. கவுதம் காம்பீர் வியாழக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவொன்றில் ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர், “டெல்லிவாசிகளே விழித்துக்கொள்ளுங்கள். டெல்லி சாக்கடையாக மாறிவருகிறது. இங்கு எதுவும் இலவசம் இல்லை, இதுதான் பரிசு” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் கேஜ்ரிவால் அரசின் இலவச மின்சாரம், இலவச தண்ணீர் திட்டத்தினை காம்பீர் கேலி செய்துள்ளார்.
ஹரியாணா காத்திருக்காது ஏன்?: – ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், டெல்லியின் நிலைக்காக பாஜக மற்றும் ஹரியாணா அரசை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில்,”பாஜகவுக்கு கூட்டாட்சியில் நம்பிக்கை இல்லை என்று நாம் அனைவருக்கும் தெரியும். ஹரியாணா அரசு தொடர்ந்து தண்ணீரைத் திறந்துவிடுவதற்கு பதிலாக, 5 – 6 மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் திறந்து விட்டால் என்ன நடந்து விடும்? குறைந்தபட்சம் டெல்லியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்காவது அவகாசம் கிடைத்திருக்கும். பாஜக எப்போதும் அதன் அழுக்கு அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.
பஞ்சாப்பின் தொடர் எதிர்ப்பு காரணமாக இமாச்சல பிரதேச அரசு, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களுக்கு அவகாசம் அளிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தி வைத்தது. ஆனால், கல்வியறிவு இல்லாத ஹரியாணா அரசு அப்படி செய்யவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புதுடெல்லி: யமுனையின் வெள்ள நீர் நகருக்குள் புகுந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள் தவிர, டெல்லிக்குள் இதர கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். | வாசிக்க > நகருக்குள் புகுந்த யமுனை வெள்ளம்: டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை