ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பீகார் மாநில தொழிலாளர்கள் 3 பேரை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த 3 பீகார் மாநில தொழிலாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் தற்போது வரை அரசியல் நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 370-வது பிரிவு நீக்கப்பட்டதால் வெளி மாநிலத்தவரும் வாக்காளர்களாக முடியும் என்கிற நிலைமை உருவானது. அப்போதே, வெளி மாநிலத்தவரை குறிவைத்து தாக்குடல் நடத்துவோம் என தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் வெளி மாநில தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வந்தனர். கடந்த சில மாதங்களாக இத்தகைய தாக்குதல்கள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் 3 பேரை குறிவைத்து ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அன்மோல் குமார், பிந்து தாக்கூர், ஹெராலால் யாதவ் ஆகியோர் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 3 பேரும் பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் காஷ்மீரில் வெளி மாநிலத்தவர் பெரும் அச்சத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.
J&K | Terrorists fired upon three outside labourers in Shopian district late Thursday evening. All the injured are admitted to SMSH Hospital, Srinagar.
The injured persons are Anmol Kumar, Pintu Kumar Thakur and Heralal Yadav, all residents of District Supaul, Bihar. pic.twitter.com/aab95Ep9Xl
— ANI (@ANI) July 14, 2023