மத்திய அரசு சமீபத்தில், பள்ளிக்கல்வித்துறையில் எந்த மாநிலம் சிறப்பாக இருக்கிறது என்பது தொடர்பாக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில், சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றன. மகாராஷ்டிரா உட்பட 8 மாநிலங்கள் 30 முதல் 40 சதவீத மதிப்பெண்கள் மட்டும் பெற்று மிகவும் பின்தங்கியிருக்கின்றன. மேலும் 2020-21ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இருந்த மகாராஷ்டிரா, இப்போது 8-வது இடத்துக்குச் சென்றுவிட்டது.

இதன் காரணமாக கல்வித்தரத்தை உயர்த்த மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுத்துவருகிறது. இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர் கூறுகையில், “ஆசிரியர்கள் எவ்வாறு பாடம் நடத்துகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளவும், மாணவர்கள் சரியாகப் பள்ளிக்கு வருகிறார்களா என்பதை கண்காணிக்கவும் அரசுப் பள்ளிகளில் கேமரா பொருத்தப்படவிருக்கிறது.
மேலும், மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது பற்றி ஆசிரியர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சி கொடுக்கப்படும். அப்படியும் சரியாக பாடம் நடத்த தவறும் ஆசிரியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். கூடவே அத்தகைய ஆசிரியர்களுக்கு மேலும் 6 மாதங்கள் பயிற்சி கொடுக்கப்படும். அவர்கள் பாடம் நடத்துவதில் முன்னேற்றம் அடையவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, மாணவர்கள் சரியாக படிக்கவில்லையெனில் அதற்கும் ஆசிரியர்கள் சம்பளம் பிடிப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் இடங்களை புதிய ஆசிரியர்களை கொண்டு நியமிக்காமல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர். இத்தகைய சூழலில் சம்பளத்திலும் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது, ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது,