திருமலை: ஒவ்வொரு வருடமும் தமிழ் ஆனி மாதம் முடிந்து, ஆடி மாதம் முதல் நாள், ஆகம விதிகளின்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அன்றைய தினம், கோயில் வளாகத்தில் உள்ள கருடன் சன்னதி முன், உற்சவரான மலையப்பர், சேனாதிபதியான விஸ்வகேசவர் ஆகியோர் முன்னிலையில் ஜீயர் சுவாமிகள், தலைமை அர்ச்சகர் மற்றும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஆகியோர் ஆஜராவர்.
முன்னதாக ஜீயர் சுவாமிகள் 6 செட் உடைமைகளை தலையில் சுமந்து வந்து, அவற்றில் நான்கை மூலவருக்கும், மற்ற இரண்டை மலையப்பர் மற்றும் விஸ்வகேசவருக்கும் சமர்ப்பிப்பார். மலையப்பர் முன், வருடாந்திர கணக்கு வழக்குகள் (பட்ஜெட்) ஒப்பிக்கப்படும்.
இதனை தொடர்ந்து, பிரதான அர்ச்சகர் என்பவர், கோயிலின் கொத்து சாவியை ஜீயர்கள், நிர்வாக அதிகாரிகள் கையில் கொடுத்து, பின்னர் அதை வாங்கி மூலவரின் பாதங்களில் சமர்ப்பிப்பார்.
இந்த சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர் மாலை தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் பூப்பல்லக்கில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது திருமலையில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நாளை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்வேறு சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் வார இறுதி நாட்கள் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.