சென்னை: கோலிவுட்டின் ஆல்டைம் சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார் ரஜினிகாந்த்.
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினி வலம் வருகிறார்
இந்நிலையில் தனது ஆரம்ப காலத்தில் சில ஆயிரங்கள் மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார்.
அவர் முதன்முறையாக அதிக சம்பளம் வாங்கிய சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
தயங்கி தயங்கி சம்பளம் கேட்ட ரஜினி
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டர் என்றால் அது ரஜினிகாந்த் தான் என்பது அனைவரும் அறிந்ததே. 70 வயதிலும் ஜெயிலர், லால் சலாம், தலைவர் 170 என அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சாதாரண நடிகராக திரை வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினி, தற்போது 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் கால் கடுக்க காத்திருந்த சம்பவம் எல்லாம் நடந்துள்ளன. அதேபோல், தன்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் கஷ்டத்தில் இருந்தபோது, அவர்களுக்காக குறைந்த சம்பளத்தில் நடித்து கொடுத்தும் உதவியுள்ளார். அப்படி அவர் ஆரம்ப காலத்தில் தனக்கு அதிகம் வாய்ப்புக் கொடுத்த ஏவிஎம் நிறுவனத்துக்காக ‘சிவாஜி’ படத்திலும் நடித்துக் கொடுத்திருந்தார்.
அதேநேரம் ரஜினியை முதன்முதலாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துக்கு கொண்டு சென்றதும் ஏவிஎம் நிறுவனம் தானாம். முக்கியமாக சம்பள விஷயத்தில் ரஜினியை உச்சம் கொண்டு சென்றதும் ஏவிஎம் தான் என சொல்லப்படுகிறது. அதாவது எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் 1978ம் ஆண்டு வெளியான திரைப்படம் ப்ரியா. இதில் ஹீரோவாக நடித்த ரஜினிக்கு 20,000 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது இப்படத்தின் கதை ஆசிரியராக இருந்த பஞ்சு அருணாச்சலத்திடம் தனது சம்பளம் குறித்து தயங்கி தயங்கி கேட்டுள்ளார். அதாவது தன்னுடைய அடுத்த படத்தில் இருந்து 5000 ரூபாய் வரை அதிகமாக வேண்டும் என கேட்டுப் பார்த்துள்ளார். அதற்கு அவரோ, இதை ஏன் இப்படி தயக்கத்துடன் கேட்கிறாய், வெளியில் உன்னுடைய மார்க்கெட் என்னவென்று தெரியாதா? உனது படத்தை விநியோகஸ்தர்கள் சண்டைப் போட்டு வாங்குவதாகக் கூறியுள்ளார்.
மேலும் அடுத்து நடிக்கவுள்ள முரட்டுக்காளை படத்திற்கு ஏவிஎம் நிறுவனத்திடம் கூறி சம்பளத்தை கூட்டிக் கொடுக்க சொல்கிறேன் என்றும் ரஜினியிடம் கூறியுள்ளார் பஞ்சு அருணாச்சலம். அதன்படியே முரட்டுக்காளை படத்தில் நடித்த ரஜினிக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்கலாம் என ஏவிஎம் நிறுவனத்திடம் கூறியுள்ளார் பஞ்சு அருணாச்சலம். அதனை ஏற்றுக்கொண்ட ஏவிஎம் நிறுவனம், ஒரு லட்ச ரூபாய் வேண்டாம், அதற்கு பதில் 1,10,000 என கொடுக்கலாம் என கூறி சம்பளம் வழங்கியதாம்.