சென்னை: Bigboss Vikraman (பிக்பாஸ் விக்ரமன்) பிக்பாஸ் விக்ரமன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கிருபா முனுசாமி என்பவர் குற்றஞ்சாட்டியிருக்கும் சூழலில் மோகன் ஜி ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் விக்ரமன். பிக்பாஸ் வீட்டுக்குள் அவரது நடவடிக்கைக்கும், பேச்சுக்கும் பலரும் ரசிகர்களாக மாறினர். குறிப்பாக அறம் வெல்லும் என்று அவர் சொன்னது அவருக்கான அடையாளமாகவே மாறிப்போனது. மேலும் அவர்தான் டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அசீம் அந்த டைட்டிலை தட்டி சென்றார்.
குற்றச்சாட்டு: சூழல் இப்படி இருக்க கிருபா முனுசாமி என்ற பெண்மணி விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார். பணத்தையும் ஏமாற்றிவிட்டதாக கூறி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் நேற்று வெளியிட்டிருந்த ஸ்க்ரீன் ஷாட்டில், யுகே அக்கவுண்ட்டில் இருந்த 45 ஆயிரம் ரூபாயையும், ஹெச்டிஎஃப்சி அக்கவுண்ட்டில் இருந்த 3000 ரூபாயையும் அனுப்பிவிட்டேன். இவ்வளவுதான் என்னிடம் இருந்தது என கிருபா முனுசாமி கூறியிருந்தார்.
தலைமை மீது அதிருப்தி: அதுமட்டுமின்றி மற்றொரு ஸ்க்ரீன்ஷாட்டில் விக்ரமன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை குறித்தும் தவறாக பேசியதுபோல் இருந்தது. விக்ரமன் விசிக கட்சியில் பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க விக்ரமன் மீதான குற்றச்சாட்டும்; அடுத்தடுத்து வெளியான ஸ்க்ரீன்ஷாட்டும் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உள்ளே வந்த மோகன் ஜி: இந்நிலையில் இந்த பஞ்சாயத்துக்குள் இயக்குநர் மோகன் ஜி வந்திருக்கிறார். கிருபா முனுசாமி வன்னி அரசு மற்றும் விக்ரமனுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் படத்தை ட்வீட்டை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, “நாடக காதலுக்கு அர்த்தம் கேட்டவனுக்கு எல்லாம் இந்தா உதாரணம்… பாட்டாவே பாடி இருக்காங்க பாரு” என குறிப்பிட்டிருக்கிறார்.
மோகன் ஜி Vs விக்ரமன்: முன்னதாக மோகன் ஜி திரௌபதி படத்தை நாடக காதல் என்பதன் அடிப்படையில் படமாக எடுத்திருந்தார். அந்த சமயத்தில் விக்ரமன் அவரை ஒரு பேட்டி எடுத்திருந்தார். அந்தப் பேட்டியில் பல கேள்விகளை விக்ரமன் முன்வைத்தார். ஆனால் மோகன் ஜியோ பேட்டியின் பாதியிலேயே எழுந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
விக்ரமன் விளக்கம்: இதற்கிடையே கிருபா முனுசாமி விவகாரம் தொடர்பாக விக்ரமன் இன்று அளித்த விளக்கத்தில், “என் மீது கிருபா முனுசாமி என்பவர் கிளப்பி உள்ள அத்தனை குற்றச்சாட்டுக்களையும் மறுக்கிறேன். ஒரு நாணயம் என்றிருந்தால் அதற்கு இரண்டு பக்கம் இருக்கும். எனது பக்கத்தையும் கேளுங்கள், இதில், பாதிக்கப்பட்டவன் என்றால் அது நான் மட்டும் தான். என் மீது பழி சுமத்த வேண்டும் என்றே கிருபா இப்படியெல்லாம் செய்கிறார்
2020ல் நாங்கள் இருவரும் பழகினோம். அவர் பிஎச்டி படிப்புக்காக இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது அவரிடம் எனது தேவைகளுக்காக பணம் வாங்கியது உண்மை தான். ஆனால், அவருக்கு வாக்கு கொடுத்ததை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அதில், கிடைத்த பணத்தையும் திருப்பி தந்துவிட்டேன்.
மேலும், 2022ம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி லண்டனில் இருந்து கிருபா எனக்கு எழுதிய காதல் கடிதத்தையும் இணைத்துள்ளேன். நீங்களே இந்த காதல் கடிதத்தை படித்துப் பாருங்கள், மோசடி செய்பவனை பார்த்து எந்த பெண்ணாவது இப்படி ஒரு காதல் கடிதத்தை எழுதுவாரா? என கேள்வி எழுப்பி பல ஆதாரங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.