மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளாவை உள்ளடக்கிய பகுதியில் முழுக்க முழுக்க மலைப்பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மழைக் காலத்தில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுவதுண்டு. இந்த வழித்தடத்தில் மழைக் காலத்தில் உருவாகும் தற்காலிக நீர்வீழ்ச்சிகளைக் காண பெங்களூரு, மங்களூர், பெலகாவி, உத்தரகன்னடா, ஹூப்லி-தார்வாடு, புனே மற்றும் மகாராஷ்டிராவின் இதர பகுதியில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அதோடு இப்பகுதியில் மழைக் காலத்தில் ஏராளமானோர் மலை ஏற்றத்திலும் ஈடுபடுவதுண்டு. மழைக் காலத்தில் மலை ஏற்றத்தில் ஈடுபடுவது ஆபத்தில் முடியும் என்பதால் அதற்கு கோவா அரசு தடை விதித்து இருக்கிறது.

நீர்வீழ்ச்சியைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் துத்சாகர் என்ற ரயில் நிலையத்திலிருந்துதான் அந்த நீர்வீழ்ச்சிகளுக்குச் செல்ல முடியும். ஆனால் அந்த ரயில் நிலையத்தில் அதிகமான ரயில்கள் நிற்காது. அதோடு துத்சாகர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலிலிருந்து இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. துத்சாகர் ரயில் நிலையம் கோவா மற்றும் கர்நாடகா எல்லையில் இருக்கிறது. இங்கிருந்தே நீர்வீழ்ச்சிகளைக் கண்டு ரசிக்க முடியும். இந்தப் பகுதியில் இருக்கும் மலையில் நீர்வீழ்ச்சிகள் 1000 அடி உயரத்திலிருந்து விழக்கூடியது.
கடந்த வாரம் இரண்டு சுற்றுலாப்பயணிகள் நீர்வீழ்ச்சியில் விழுந்து இறந்துவிட்டதால் கோவா அரசு நீர்வீழ்ச்சிகளுக்குச் செல்லவும் தடை விதித்து இருக்கிறது. ஆனாலும் தடையை மீறி மக்கள் நீர்வீழ்ச்சிகளுக்குச் சென்று கொண்டுதான் இருக்கின்றனர். அதிகமான சுற்றுலாப்பயணிகள் தெற்கு கோவாவில் உள்ள காலேம் என்ற ரயில் நிலையத்தில் இறங்கி ரயில் தண்டவாளம் வழியாக நடந்தே துத்சாகர் ரயில் நிலையத்திற்கு வருவது வழக்கம்.
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் ரயிலிலிருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்து செல்வதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. அதோடு அவர்கள் தண்டவாளத்தில் நடந்து செல்லும் போது எந்நேரமும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. மழையால் நிலச்சரிவும் ஏற்படும்.
எனவே தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “துத்சாகர் நீர்வீழ்ச்சிகளை உங்களது ரயில் பெட்டியிலிருந்தவாறு கண்டுகளியுங்கள். தண்டவாளத்தில் இறங்கி நடக்காதீர்கள். தண்டவாளத்தில் நடப்பது உங்களது உயிருக்கு ஆபத்தானதோடு, ரயில்வே சட்டப்படி குற்றமாகும், ஆபத்துமாகும். விதிகளைப் பின்பற்றி ரயில்வேக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வேயின் எச்சரிக்கையை மீறி ரயில் தண்டவாளத்தின் வழியாக நடந்து சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு ரயில்வே போலீஸார் நூதன தண்டனை கொடுத்துள்ளனர். ரயில்வே போலீஸாரும், வனத்துறையினரும் சேர்ந்து தண்டவாளத்தில் நடந்து சென்ற சுற்றுலாப் பயணிகளிடம் கையை முன்பக்கம் நீட்டிக்கொண்டு உட்கார்ந்து எழும்பும் தண்டனை கொடுத்தனர். அவ்வாறு தண்டனை வழங்கப்பட்டதை ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அது இப்போது வைரலாகி இருக்கிறது.
ரயில் தண்டவாளத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். துத்சாகர் என்றால் பால்கடல் என்று அர்த்தமாகும். பாலை மேலிருந்து கீழே ஊற்றுவது போல் நீர்வீழ்ச்சி இருக்கும். துத்சாகர் மலைப்பகுதியில் இன்னும் மலையேற்றம் தொடங்கவில்லை என்றும் சிலர் சட்டவிரோதமாக மலையேற்றத்தில் ஈடுபடுவதாக மலையேற்றத்திற்கு ஏற்பாடு செய்யும் பிரவீன் என்பவர் தெரிவித்துள்ளார். வனத்துறையினர் அனுமதி கொடுத்த பிறகே மலையேற்றத்தில் ஈடுபட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.