காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்.. புழல் சிறைக்கு மாற்றப்படுகிறார்.. பெரும் பரபரப்பு

சென்னை:
பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை புழல் சிறைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். புழல் சிறைக்கு கொண்டு சென்றதும் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் – நடத்துநர்களின் நியமனத்துக்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.

இதன்பேரில் அமலாக்கத்துறை கடந்த மாதம் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தியது. இதனைத் தொடர்ந்து, அவர் மீது குற்ற முகாந்திரம் இருப்பதாக கூறி கடந்த மாதம் 13-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.

இதய அடைப்பும் பைபாஸும்:
எனினும், கைது செய்யப்பட்ட அன்றைய தினமே தனக்கு நெஞ்சு வலிப்பதாக செந்தில் பாலாஜி கூறி அழுதார். இதன் தொடர்ச்சியாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அவரது இதயத்தில் 5 அடைப்புகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

மூன்றாவது நீதிபதி தீர்ப்பு:
இந்த சூழலில்தான், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. இதில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட கார்த்திகேயன் என்பவர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு அமலாக்கத்துறைக்கு சாதகமான தீர்ப்பாக பார்க்கப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்:
இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியின் உடல்நிலை நன்றாக தேறியதாக கூறி காவேரி மருத்துவமனை அவரை இன்று டிஸ்சார்ஜ் செய்தது. இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை தனது கட்டுப்பாட்டின் கீழ் அமலாக்கத்துறை கொண்டு வந்தது. தற்போது அவரை புழல் சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் அமலாக்கத்துறை ஈடுபட்டு வருகிறது. ஆம்புலன்ஸ் மூலமாக இன்று இரவுக்குள் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்படுவார் எனக் கூறப்படுகிறது.

புழல் சிறைக்கு மாற்றம்:
தற்சமயம் நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். பின்னர் அவரது உடல்நிலை நன்றாக தேறியதும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. செந்தில் பாலாஜி விரைவில் காவலில் எடுக்கப்படவுள்ளதால் திமுக வட்டாரங்கள் பெரும் பரபரப்புடன் காணப்படுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.