'புராஜக்ட் கே' – தீபிகாவின் 'கண்கள்' என்ன சொல்கிறது?

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை இயக்கிய நாக் அஷ்வின் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'புராஜக்ட் கே'. பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு, மற்ற அப்டேட்டுகள் அமெரிக்காவில் ஜூலை 20ம் தேதி நடைபெற உள்ள 'காமிக் கான்' நிகழ்வில் வெளியாக உள்ளது. இதனிடையே, படத்தின் கதாநாயகியான தீபிகா படுகோனேவின் கதாபாத்திர போஸ்டரை நேற்று வெளியிட்டார்கள்.

நேற்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக சொல்லப்பட்ட அந்த போஸ்டர், 5 மணி நேர தாமதத்திற்குப் பிறகு இரவு 10 மணிக்கு மேல் வெளியிடப்பட்டது. எங்கோ பார்த்துக் கொண்டிருக்கும் தீபிகாவின் குளோசப் புகைப்படம் அதில் இடம் பெற்றுள்ளது. “நாளை நன்றாக இருக்க ஒரு நம்பிக்கை வெளிச்சத்திற்கு வருகிறது, இது தீபிகா படுகோனே, புராஜக்ட் கே' படத்திலிருந்து,” என அதில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த போஸ்டரின் மற்றுமொரு அப்டேட்டில், “புதிய உலகத்தின் நம்பிக்கையை அவளது கண்கள் சுமந்து கொண்டிருக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

பெங்களூருவைச் சேர்ந்த தீபிகா படுகோனே ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். 2006ல் 'ஐஸ்வர்யா' என்ற கன்னடப் படம் மூலம் அறிமுகமான தீபிகா, 2014ல் வெளியான மோஷன் கேப்சரிங் தமிழ்ப் படமான 'கோச்சடையான்' படத்தில் நடித்தார். இப்போது 'புராஜக்ட் கே' மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.