அகில இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி.யுமான பிரிஜ் பூஷன், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள வீராங்கனைகள் 6 பேர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அவரை கைது செய்யவேண்டும் என்றும் கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளையாட்டு வீராங்கனையான மைனர் சிறுமி ஒருவரும், பிரிஜ் பூஷன் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்திருந்தார். பல நாள்கள் போராட்டம், மற்றும் சுப்ரீம் கோர்ட் தலையீட்டுக்குப் பின்னரே, பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

என்றாலும், இவ்வழக்கில் பிரிஜ் பூஷன் கைது செய்யப்படவே இல்லை. டெல்லியில் போராடி வந்த வீராங்கனைகள், தங்கள் போராட்டத்தை இனி நீதிமன்றத்தில் தொடர்வதாகச் சொல்லி முடித்தனர்.
டெல்லி போலீஸார், பிரிஜ் பூஷன் மற்றும் கூட்டமைப்பின் துணை செயலாளர் வினோத் தோமர் ஆகியோர் மீது ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இதில் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறிய பெண்களுக்கு ஆதரவாக 15 பேர் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இக்குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் மற்றும் வினோத் ஆகிய இரண்டு பேருக்கும், கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள் கோர்ட்டில் ஆஜராகி தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இரண்டு பேருக்கும் தற்காலிக ஜாமீன் வழங்கியது. மேலும் அவர்களின் வழக்கமான ஜாமீன் மனு மீது வரும் 21-ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகளை தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் பிரிஜ் பூஷனுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், மேரி கோம் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது. அக்கமிட்டி தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. ஆனால் அதனை அரசு வெளியிடவே இல்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிறகு பிரிஜ் பூஷனை பலரும் அவரது பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி போராட்டம் நடத்த, ’நான் ஏன் என் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்? வழக்கை சட்டப்படி சந்திப்பேன்’ என்று பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.