நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வருகிற 28ம் தேதி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக கோவை வந்த சந்தானம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “அவர் டிடி ரிட்டன்ஸ் திகில் திரைப்படம். வழக்கமாக திகில் படம் என்றால் பேய் பழிவாங்கும். அதை அடக்க ஒரு மந்திரிவாதி வருவார். அது அப்படியான படமாக இல்லாமல், ஒரு சைகோ பேயிடம் சிக்கிய டீம், ஒரு கேம் விளையாடி தப்பிப்பது போன்ற வித்தியாசமான கதைக்களமாக இருக்கும்.

இன்றைய குழந்தைகளுக்கு பேய் பயம் பெரிதாக இல்லை. இதனால் ஜாலியாக ஒரு கதையை சொல்லலாம் என்ற அடிப்படையில் தான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம்.
கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், முனிஸ்காந்த், ஸ்ருதி, லொள்ளு சபா டீம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அடுத்து ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி கோவையை கதைக்களமாக வைத்துதான் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறேன். கதாநாயகனா நகைச்சுவை நடிகரா என்று கேட்டால் இட்லி வேண்டுமா… தோசை வேண்டுமா… என்பது போல இருக்கும்.
நகைச்சுவை நடிகராக இருந்தபோது ஜாலியாக இருந்தேன். இப்போது கதாநாயகனாக நடிப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். நல்ல கதை வந்தால், பெரிய நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பேன்.
இன்றைக்கு மல்டி ஸ்டார் படம் தான் ட்ரெண்ட். எவ்வளவு பெரிய நாயகனாக இருந்தாலும் கதை தான் நாயகன். திரைப்படங்களில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை தவிர்ப்பது சிறப்பு. சினிமா மூலம் இந்தத் தலைமுறைக்கு நல்ல கருத்துகளை எடுத்து சொல்ல வேண்டும்.” என்றவரிடம்,

தொடர்ந்து காலையில் மது அருந்துவோர் குறித்த அமைச்சர் முத்துசாமியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “டிடி ரிட்டன்ஸ் குறித்து பேச வந்துள்ளேன். சரக்கு பற்றி பேசினால் காலையிலேயே நான் சரக்கு போட்டு வந்ததாக நினைப்பார்கள்.” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.