Project K: அடுத்த ஆதிபுருஷ் ரெடி… வெளியானது ப்ராஜெக்ட் கே பிரபாஸ் லுக்… ரசிகர்கள் ஏமாற்றம்!

வாஷிங்டன்: பிரபாஸ் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ப்ராஜெக்ட் கே.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகும் இதில் கமல், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ப்ராஜெக்ட் கே க்ளிம்ப்ஸ் வீடியோ ஜூலை 21ம் தேதி அமெரிக்காவில் இருந்து வெளியிடப்படுகிறது.

அதற்கு முன்னதாக பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளது.

வெளியான ப்ராஜெக்ட் கே பிரபாஸ் லுக்:பாகுபலி படத்திற்குப் பின்னர் சரியான சூப்பர் ஹிட் அமையாமல் திணறி வருகிறார் பிரபாஸ். சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் என அடி மேல் அடி வாங்கி நிற்கும் பிரபாஸ், அடுத்து சலார், ப்ராஜெக்ட் கே படங்களை அதிகம் நம்பிக்கையோடு எதிர்பார்த்துள்ளார். அவரது ரசிகர்களும் இந்த இரண்டு படங்கள் மீதும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் சலார் படத்தின் டீசர் வெளியானது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் செப்டம்பரில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 2024 ஜனவரியில் ப்ராஜெக்ட் கே திரைப்படம் ரிலீஸாகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகும் இதில், கமல், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோரும் லீடிங் ரோலில் நடிக்கின்றனர்.

ப்ராஜெக்ட் கே காமிக்ஸ் ஜானர் படமாக இருக்கும் என படக்குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்களுக்கு அறிவிக்கும் விதமாக இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவில் வரும் 21ம் தேதி பிரம்மாண்டமான நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவில் பல சர்ப்ரைஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. இதில் பிரபாஸின் லுக் மார்வெல் ஹீரோவை போல காணப்படுகிறார். அதுமட்டும் இல்லாமல் அவரது லுக்கில் இதிகாச புராணங்களில் வரும் நாயகனின் தோற்றமும் தென்படுகிறது. சான் டியாகோ காமிக் நிறுவனத்தின் தரமான மேக்கிங்கை இந்த போஸ்டரில் பார்க்க முடிவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

 Project K: Prabhas first look revealed from Project K Film

அதேநேரம் பிரபாஸ் காமிக்ஸ் ஹீரோவாக நடித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸின் லுக் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. இப்போது ப்ராஜெக்ட் கே படத்திலும் அதேபோல் இருப்பதாக ட்ரோல் செய்யப்படுகிறது. ஹாலிவுட் படங்களில் வரும் மார்வெல் ஹீரோக்களை ரசிக்கும் இந்திய ரசிகர்களால், இங்குள்ள ஹீரோக்களை மார்வெல் நாயகனாக பார்க்க முடியவில்லை எனக் கூறி வருகின்றனர்.

இருப்பினும் ப்ராஜெக்ட் கே க்ளிம்ப்ஸ் வெளியான பின்னரே பிரபாஸுக்கு இந்தப் படம் கை கொடுக்குமா இல்லையா என்பது தெரியவரும். இந்நிலையில் ப்ராஜெக்ட் கே க்ளிம்ப்ஸ் வெளியீட்டுக்காக முதல் ஆளாக அமெரிக்கா சென்றுவிட்டார் கமல்ஹாசன். அவரைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்டோரும் அமெரிக்கா சென்றுள்ளனர். ஜூலை 21ம் தேதி வெளியாகும் ப்ராஜெக்ட் கே க்ளிம்ப்ஸ், ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.