இம்பால்: மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்கள் இருவரை சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, வயல்வெளியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோக்களை ஷேர் செய்ய வேண்டாம் என்று டிவிட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக ஒரு வியூகத்தை வகுத்தது. அதன்படி, மைத்தேயி/மெய்டெய் எனப்படும் பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இவர்கள் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 53 சதவிகிதமாவார்கள். இந்த வாக்குறுதி பலனளித்தது. பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
அதன் பின்னர் மைத்தேயி/மெய்டெய் மக்கள் பழங்குடி அந்தஸ்து கேட்டு போராட, பழங்குடியினரான குக்கி, நாகா மக்கள் இதற்கு எதிரான போராட்டத்தை தொடங்கினர். கடந்த மே மாதம் 3ம் தேதி தொடங்கிய இந்த போராட்டங்கள் கலவரமாக மாறி தற்போது வரை 100க்கும் அதிமானோரரை பலி கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள், நிறுவனங்கள், வாகனங்கள், வழிபாட்டுத்தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இந்த வன்முறையில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 135க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர் மோடி தலையிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால் பிரதமர் இது குறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை இயற்றியிருந்தது. அதில், “சிறுபான்மையினர், பெண்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் நடைபெறும் வன்முறையானது மத ரீதியாகவும் இன ரீதியாகவும் நடைபெறுகிறது.
குறிப்பாக சொல்வதெனில் இந்துக்கள் அதிகம் இருக்கும் மைதேயி இன மக்களுக்கும், கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் குக்கி இன மக்களுக்குமிடையில் வன்முறை நீடித்துவருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல பொது சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இந்த வன்முறை தொடர்பாக மனித உரிமைக் குழுக்கள் அளித்திருக்கும் அறிக்கையில்,
“இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் அரசு தேசிய அளவில் குறிப்பிட்ட மதச் சிறுபான்மையினரை ஒடுக்கும், பிளவுபடுத்தும் இனவாதக் கொள்கைகளைச் செயல்படுத்துவதாகக் குற்றம்சாட்டியிருக்கின்றன” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மணிப்பூரில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம் பெண்கள் இருவரை வன்முறை கும்பல் ஒன்று நிர்வாணப்படுத்தி சாலையில் அழைத்த சென்று, அருகே இருந்த வயல்வெளியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்த சம்பவம் மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்த 32 கி.மீ தொலைவுள்ள ஓர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். பிரச்னை பெரியதாக உருவாகி வருகிறது. அதேபோல இதில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் கூறியுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் எனவே வீடியோக்களை டிவிட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் பகிரப்படக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.