சென்னை: ஜோஷ் செயலியுடன் இணைந்து நடிகை ஆண்ட்ரியா நடத்தும் இசைக் கச்சேரி நிகழ்ச்சி வரும் ஜூலை 22ம் தேதி சேலத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. வெளிநாட்டு இசைக் கலைஞர்களை போல தற்போது கோலிவுட் பிரபலங்களும் உள்ளூர் முதல் சர்வதேச அளவில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகின்றனர்.
யுவன் சங்கர் ராஜா மற்றும் சிம்பு இணைந்து மலேசியாவில் கச்சேரி நடத்தி ஒரு பக்கம் கலக்கி வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத், பாடகி ஜோனிடா காந்தி என பலரும் லைவ் இசை கச்சேரிகளை நடத்தி இளம் ரசிகர்களை வைப் ஆக்கி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியாவும் வெளிநாடுகளில் இசை கச்சேரியை நடத்தி வந்த நிலையில், அடுத்ததாக சேலத்தில் தமிழ்நாட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்த சூப்பரான இசைக் கச்சேரி ஒன்றை ஜோஷ் செயலியுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளார்.
வரும் ஜூலை 22ம் தேதி சேலத்தில் உள்ள ஜவஹர் மில்ஸ் ரமணி திடலில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு நடிகையும் பிரபல பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசைக் கச்சேரி நடைபெற உள்ளது.
நடிகை ஆண்ட்ரியா இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அரண்மனை, வடசென்னை, தரமணி, அனல் மேலே பனித்துளி உள்ளிட்ட பல படங்களில் போல்டான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் படத்தில் இடம்பெற்ற “கண்ணும் கண்ணும் நோக்கியா” பாடலை பாடி பாடகராக அறிமுகமான இவர் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த புஷ்பா படத்தின் “ஓ சொல்றியா மாமா” பாடலையும் ஆண்ட்ரியா தான் பாடினார். இந்நிலையில், அவர் பாடிய பல பாடல்கள் இந்த இசைக்கச்சேரி நிகழ்ச்சியில் ரசிகர்களுக்காக பாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.