வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும்: பெப்சி வேண்டுகோள்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொதுச்செயலாளர் பி.என்.சுவாமிநாதன், பொருளாளர் எஸ்.பி.செந்தில்குமார் ஆகியோர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை மற்றும் எடுக்கப்பட்ட புதிய முடிவுகள் குறித்து விளக்கினார்கள். பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ் திரைப்பட துறை வளர்ச்சிக்காக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தயாரிப்பாளர்கள் சங்கத்துடனும், அனைத்து திரைப்பட அமைப்புகளுடனும் கலந்தாலோசித்து சில விதிகளை பின்பற்ற முடிவு எடுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு: ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கு முன் நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்புதல் பெறப்பட்டு, படப்பிடிப்பு சரியாக திட்டமிடப்பட்டு அதன்பிறகே தொடங்க வேண்டும். எல்லாம் சரியாக இருக்கிறது என்று தயாரிப்பாளர் சங்கம் பரிந்துரை கடிதம் கொடுத்த பிறகே அந்த படத்தில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், பெப்சியும் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திட்ட ஒப்பந்ததை முழுமையாக பின்பற்ற வேண்டும். தமிழ் படங்களில் தமிழக கலைஞர்களையே பயன்படுத்த வேண்டும். தமிழகத்திலேயே படப்பிடிப்பை நடத்திட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் தவிர, வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும். தினசரி ஊதிய பணியாளர்களுக்கு அன்றைய தினமே ஊதியம் வழங்க வேண்டும்.

இயக்குனரே எழுத்தாளராக இருந்தால், கதை உரிமையில் பிரச்னை ஏற்படும் பட்சத்தில் அவரே பொறுப்பேற்க வேண்டும். தயாரிப்பாளர் பிரச்னையில் பாதிக்கப்படக்கூடாது. இயக்குனர் வேறொருவர் கதையை படமாக்கினால் அதற்குரிய உரிமத்தை முறையாக பெற வேண்டும்.
குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள்ளேயே, நாட்களுக்குள்ளேயே படத்தை முடிக்க முடியாமல் போனால், அதுகுறித்த உரிய விளக்கத்தை தயாரிப்பு நிர்வாகிகள் எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும். மேற்கண்டவை உள்ளிட்ட புதிய விதிமுறைகள் மீறப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.