அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் செயற்பாடுகள் இந்நாட்டின் அரச சேவையை மேம்படுத்துவதற்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க, அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
2019- 2020 ஆம் ஆண்டுகளில் செயற்திறனை வெளிப்படுத்தியிருந்த 65 அரச நிறுவனங்களுக்கு தங்க மற்றும் வௌ்ளி விருதுகளை வழங்கும் வகையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க தலைமையில், பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன மற்றும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு (18) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
பசுமைப் பொருளாதாரம், டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் நவீனமயப்படுத்தல் என்பவற்றுடன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளை பழமையான முறையின் கீழ் முன்னெடுக்க முடியாதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து அரசாங்க நிறுவனங்களும் ஒரு நோக்கத்தின் கீழ் ஒரே திட்டமிடலுடனான பிரிவுகளாக ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அரச செலவீனங்களை கட்டுப்படுத்தல், ஒவ்வொரு ரூபாவிற்கும் உச்ச பெறுமதியை பெற்றுக்கொடுத்தல், வருமானத்தை அதிகரித்துக்கொள்ளல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்திக் கொள்ளல் உள்ளிட்ட செயற்பாடுகளின் வாயிலாக நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டியது அவசியம் என்றும், அதற்கான வலுவான நிர்வாகக் கட்டமைப்பொன்று நாட்டுக்கு அவசியப்படுகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்துக் கொள்வதற்காக வலயத்தின் பரந்த பொருளாதார கூட்டிணைவான RCEP இல் இணைவது மற்றும் இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.
இங்கு உரையாற்றிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண, விருதுகளைப் பெற்றுக்கொண்ட அரசாங்க நிறுவனங்களுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன், 2015ஆம் ஆண்டில் இருந்ததைவிட அரசாங்க நிறுவனங்கள் 98 வீதம் முன்னேற்றம் கண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் பொதுக் கணக்குகளைப் பராமரிக்கும் முறைமை, நிதிக் கட்டுப்பாடு மற்றும் செயல்திறன் என்பன பாராளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் செயல்படுத்தப்படும் கணினிமயப்படுத்தப்பட்ட முறையில் வருடாந்தம் மதிப்பீடு செய்யப்படுவதுடன், அதற்கமைய, கணக்காய்வாளர் நாயகத்தினால் பகுப்பாய்வு மற்றும் விசாரணை செய்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுக்கு அமைய சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்திய அரச நிறுவனங்களுக்கு இவ்வாறு விருதுகள் வழங்கப்பட்டன.
அதற்கமைய, 833 அரச நிறுவனங்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 2019 ஆம் ஆண்டில் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நிறுவனங்களுக்கு தங்க விருதுகளும் 30 நிறுவனங்களுக்கு வெள்ளி விருதுகளும், 2020 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நிறுவங்களுக்கு தங்க விருதுகளும் 30 நிறுவனங்களுக்கு வெள்ளி விருதுகள் வழங்கப்பட்டன.
அரசாங்க அமைச்சுக்கள், அரசாங்கத் திணைக்களங்கள், அரசாங்கத்தின் விசேட செலவின அலகுகள், மாவட்ட செயலகங்கள், மாகாண சபை நிதியங்கள், மாகாணசபைகளின் அமைச்சு திணைக்களம்சார் விசேட செலவின அலகுகள், மாகாண சபைகளின் நியதிச்சட்டநிறுவனங்கள், மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் போன்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
எட்டாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் எண்ணக்கருவுக்கு அமைய அரச நிறுவனங்களின் நிதி மற்றும் செயல்திறனை முறைமைப்படுத்தும் நோக்கில் அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் கணினிமயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் 2015 நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் நிகழ்வில் அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபைகளின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட சுமார் 1000 அரச நிறுவனங்கள் Zoom தொழிநுட்பத்தினூடாக இணைந்துகொண்டனர்.