சென்னை: விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் நடிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார் கமல்ஹாசன்.
இந்தியன் 2, கல்கி 2898, KH 233, KH 234 என நான்கு படங்கள் கமலின் லைன்-அப்பில் உள்ளன.
இந்நிலையில் தனக்கு கோபம் வந்தால் என்ன செய்வேன் என்பது கெளதமிக்கு தெரியும் என கமல் கூறிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
கெளதமிக்கு எல்லாம் தெரியும்: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி 2898 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அவரது 233, 234-வது படங்களில் நடிக்கவுள்ளார். கடந்தாண்டு சூப்பர் ஹிட்டான விக்ரம்க்குப் பின்னர் கமல் படங்கள் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், அவரது பழைய த்ரோபேக் பேட்டிகளையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நீஙளும் ஆகலாம் கோடீஸ்வரன்’ நிகழ்ச்சி, தொலைக்காட்சி ரசிகர்களின் ஃபேவரைட்களில் ஒன்று. இதில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை கெளதமியுடன் கலந்துகொண்டார் கமல்ஹாசன். இந்நிகழ்ச்சியை பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. அப்போது கமல்ஹாசனிடம் மெடிடேஷன் குறித்து கேள்வி எழுப்பினார் விஜய் டிவி புகழ் ரம்யா.
அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த கமல், “பலமுறை இதுபற்றி நானும் யோசித்துள்ளேன், ஆனால் இதுவரை மெடிடேஷன் பற்றி தனக்கு புரியவில்லை” என்றார். அதுமட்டும் இல்லாமல் இளையராஜா இதில் அதிக அனுபவம் உள்ளவர் என்பதால், அவரிடம் ஆலோசனை கேட்டாராம் கமல். அவரும் பல ஐடியா சொல்ல, ஆனால் கமலுக்கு எதுவும் செட்டாகவில்லையாம்.

இறுதியாக “கடவுள் நம்பிக்கை இல்லன்னா மெடிடேஷன் பண்ண முடியாதா” என இளையராஜாவிடமே கேட்டுள்ளார். அவர் பதிலே சொல்லாமல் அங்கிருந்து நழுவியுள்ளார். அதன் பிறகு தான் விஸ்வரூபம் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த பிரச்சினை குறித்து கமலுக்கு செய்தி வரும் போது கெளதமியும் அருகில் இருந்துள்ளார். அப்போது ரொம்பவே டென்ஷனான கமல், உடனடியாக அவரது ரூமில் சென்று படுத்து தூங்கிவிட்டாராம்.
இப்படி தனக்கு எப்போது பிரச்சினை வந்தாலும் தனியாக போய் படுத்து தூங்கிவிடுவேன் என்றுள்ளார். இது கெளதமிக்கு மட்டும் தான் தெரியும் எனவும் கமல் கூறியுள்ளார். இந்த த்ரோபேக் வீடியோவை ரசிகர்கள் இப்போதும் வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.