துபாய்: கடந்த 2015-ம் ஆண்டு குவைத் மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய குற்றவாளிகள் 5 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து குவைத் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2015-ம் ஆண்டு ஷியாமசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐஎஸ் அமைப்பு இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்றது.
இதையடுத்து, இந்த தாக்குதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனை வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதில், போதைப் பொருள் கடத்திய குற்றவாளி ஒருவரும் அடங்குவார். இவர் இலங்கையை சேர்ந்தவர்.
தண்டனை பெற்றவர்களில் ஒருவர் எகிப்தியர், மற்றொருவர் குவைத்தை சேர்ந்தவர். எஞ்சிய சிலர் சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குவைத்தில் மிகவும் பழமையான ஷியா மசூதியொன்றில் கடந்த 2015-ம் ஆண்டு தொழுகை வேளையின் போது ஐஎஸ் தீவிரவாதிகள் நிகழ்த்திய இந்த குண்டுவெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர், உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சன்னி பிரிவைச் சேர்ந்த ஐஎஸ்தீவிரவாத குழு ஷியா முஸ்லிம்களை குறிவைத்து தாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.