திருகோணமலை மாவட்ட மக்களின் ஜீவனோபாயத்தை உயர்த்தி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதே தனது நோக்கம் என புதிய அரசாங்க அதிபராகத் தனது கடமைகளை பொறுப்பேற்ற சமிந்த ஹெட்டிஆராச்சி தெரிவித்தார்.
இலங்கை நிருவாக சேவையில் விசேட தர அதிகாரியான சமிந்த ஹெட்டிஆராச்சி திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நேற்று (27) தனது கடமைகளை மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்தார்.
“கடந்த ஆறு வருடங்கள் திருகோணமலை மாவட்டத்தில் பணிபுரிந்ததால் மாவட்டம் தொடர்பாக ஓரளவு புரிதல் எனக்குக் காணப்படுகிறது. அத்துடன் சில அதிகாரிகள் அப்போது என்னுடன் ஒன்றாக வேலை செய்தவர்கள் என்பதனால் எதிர்காலத்தில் அரசாங்க அதிபர் பதவியில் கடமைகளை சந்தோசமாகவும் சரியாகவும் பொறுப்புடன் மேற்கொள்வதற்கு முடியும் என நான் நம்புகிறேன்.
மாவட்டத்தில் மக்களுக்கு சேவை செய்வதுடன் அவர்களின் முயற்சிகள் முன்னேற்றமடைவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கி அவர்களின் ஜீவனோபாயத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் திருகோணமலையின் அபிவிருத்திக்கு உதவி செய்தல் எனது நோக்கமாகும்” என்றும் புதிய அரசாங்க அதிபர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் போது வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
திறந்த போட்டிப் பரீட்சை ஊடாக இலங்கை நிருவாக சேவையில் இணைந்த அவர் 2000 – 2006 வரை 6 வருடங்கள் கோமரன்கடவல உதவிப் பிரதேச செயலாளராக மற்றும் பிரதேச செயலாளராகவும், பாதுகாப்பு அமைச்சின் உதவிச் செயலாளராகவும், சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவி, குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் நிருவாகியாகவும் பணியாற்றியுள்ளதுடன், திருகோணமலை அரசாங்க அதிபராக நியமனம் பெறுவதற்கு முன்னர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.