சிக்கமகளூரு-
மலைநாடு மாவட்டமான சிக்கமகளூருவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிக்கமகளூருவில் உள்ள சுற்றுலா தலமான முல்லையன்கிரி மலையில் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, முல்லையன்கிரி மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை அறியாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசிக்க முல்லையன்கிரி மலைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களை முல்லையன்கிரி மலை அடிவாரத்தில் உள்ள கைமரம் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகிறார்கள். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். சுற்றுலா பயணிகள் முல்லையன்கிரி மலைக்கு செல்லாமல் இருக்க கைமரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.