மட்டக்களப்பு மாவட்டத்தில் கறுவா உற்பத்தியினை மேற்கொள்ள நடவடிக்கை

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் வழிகாட்டல் மற்றும் திட்டமிடலுக்கு இணங்க, கறுவாப் பயிர்ச் செய்கையினை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்வதற்காக, மாவட்ட விவசாய முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மாவட்ட விவசாயப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

இக்கறுவாச் செய்கை மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை, மற்றும் ஏறாவூர் பற்று செங்கலடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட  தன்னாமுனை பிரதேச வீ. சுதாகரன் எனும் ஒரு விவசாயியால் மாத்திரம் இவ்வருடத்தில் 15,000 கறுவாக் கன்றுகளும் 2,000 கமுகுக் கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டடுள்ளன.

இக்கன்றுகள் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தினால் சான்றுப்படுத்தப்பட்டு, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மாவட்டத்திலுள்ள ஆர்வமுள்ள விவசாய முயற்சியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக, திணைக்களத்தினால் சிறிய அளவிலான வீட்டுத் தோட்டம் மற்றும் புதிய நடுகை ஆகிய இரு வகையான திட்டங்கள் இதன்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சிறிய வீட்டுத் தோட்டத் திட்டத்தில்  100 தொடக்கம் 250 வரையான கறுவாக் கன்றுகள் 10 தொடக்கம் 30 பேர்ச் நிலப் பரப்பில் செய்கை பண்ணுவதற்காகவும், புதிய மீள் நடுகையில் 900 வரையான கறுவாக் கன்றுகள் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை மேற்கொள்வதற்கும் தெரிவு செய்யப்பட்ட தலா ஒவ்வொரு விவசாய முயற்சியாளருக்கும் பிரதேச செயலகங்களுக்கு ஊடாக மானிய விலையில் வழங்கப்படவுள்ளது.

கறுவாப் பயிர்ச் செய்கை நீர் வசத மிக்க, சேதனத் தன்மை அதிகமாகவுள்ள இடங்களில், குறைந்த நிலப்பரப்பில் ஊடு பயிர்ச் செய்கையாக மேற்கொள்ளலாம். அத்துடன் அக்கன்றுகளை முறையான பழக்கப்படுத்தல் மற்றும் கத்தரித்தல் மூலம் சந்ததி சந்ததியாக வருமானம் பெற்றுத்தரும் வளமாகப் பயன்படுத்தலாம்.

ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு தேவையான வழிகாட்டல் மற்றும் கன்றுகளை  சகல  பிரதேச செயலகங்களின் விவசாயப் பிரிவு அல்லது மாவட்ட செயலக விவசாயப் பிரிவு அல்லது www.dea.gov.lk எனும் இணையத்தளம் போன்றவை வழங்கி வருகின்றன.

கறுவாக் கன்றுகளின் நடுகை முறை, பயிற்றுவித்தல் மற்றும் அறுவடைக்குப் பின்னரான நுட்ப முறை போன்றவை தொடர்பான பயிற்சிகள்  மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தரினால் ஒழுங்குசெய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.