முதல்வர் ஸ்டாலினுக்கு பெரிய வியாதி.. "கேடு காலம் வந்துருச்சி".. சட்டென சொன்ன ஜெயக்குமார்

சென்னை:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடந்த காலத்தை மறக்கடிக்கும் ‘அம்னீசியா’ வியாதி வந்துவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவதாரம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி, மணிப்பூரில் 2 இளம்பெண்கள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட சம்பவத்தையும், மகாபாரதத்தில் திரெளபதியின் சேலை உருவப்பட்ட சம்பவத்தையும் ஒப்பிட்டு பேசினார்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு பதிலடி கொடுத்து பேசும் போது, “1989-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அவரது சேலையை இழுத்து அவர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர், இன்றைக்கு பெண்களின் கவுரவம் குறித்து பேசுகிறீர்களா..?” எனக் கேள்வியெழுப்பினர். நிர்மலா சீதாராமனின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் இரண்டு நாட்களாக தீயாக பரவி வருகிறது.

இதனிடையே, நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்திருந்தார். மேலும், ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தவர் இன்றைய அமைச்சர் துரைமுருகன் தான் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த சூழலில், ஜெயலலிதாவை திமுகவினர் தாக்கியதாக நிர்மலா சீதாராமன் கூறியதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை இன்று சந்தித்து ஜெயக்குமார் கூறுகையில், “தவளை தன் வாயால் கெடும் என சொல்லப்படுவதை போல திமுகவுக்கு கேடுகாலம் ஆரம்பித்துவிட்டது. அதனால்தான் வரலாற்றையே திரித்து பேசும் அளவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். 1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதியை பொறுத்தவரை அது ஒரு கறுப்பு நாள்.

அம்மாவை (ஜெயலலிதா) கீழே தள்ளி அவரது சேலையை இழுத்து, அவரை காலால் மிதித்து திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டார்கள். அன்றைய பத்திரிகைகளில் கூட நீங்கள் இந்த செய்தியை பார்க்கலாம். அப்படி இருக்கும் போது, இந்த சம்பவமே நடைபெறவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுவதை பார்த்தால், அவருக்கு கடந்த காலத்தை மறக்கடிக்கும் அம்னீசியா நோய் வந்துவிட்டதாக அர்த்தம்” என ஜெயக்குமார் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.