பெங்களூரு : கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வது, தாமதமாவதற்கு மாநில தலைவர்களே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில், காங்கிரஸ் அரசு அமைந்து மூன்று மாதங்களாகின்றன. ஆனால், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான பா.ஜ., இதுவரை எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் இல்லாமல், இம்முறை பட்ஜெட் கூட்டம் நடந்தது.
எதிர்க்கட்சி தலைவரை நியமிக்காமல், காலம் கடத்தி வருவது குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் கிண்டலாக விமர்சிக்கின்றனர். இச்சூழ்நிலைக்கு, மாநில பா.ஜ., தலைவர்களே காரணம் என, கூறப்படுகிறது.
போட்டா போட்டி
எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், முன்னாள் அமைச்சர்கள் அசோக் உட்பட பலர் போட்டி போடுகின்றனர். இதனால் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் முடிவு வெளியான பின், அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்து, ஒரு மனதாக எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு, ஒருவரின் பெயரை மட்டும் தேர்வு செய்து, டில்லிக்கு வரும்படி பா.ஜ., மேலிடம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பதவி, தங்களுக்கே வேண்டும் என நினைக்கும் தலைவர்கள், யாருடைய பெயரையும் முடிவு செய்யவில்லை. தலைவர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததை பார்த்து, வெறுப்படைந்த பா.ஜ., மேலிடம், எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்யாமல் தாமதிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
வாய்ப்பூட்டு
தற்போது, மேலிடமே, ஒருவரை தேர்வு செய்து எதிர்க்கட்சி தலைவராக்க திட்டமிட்டுள்ளது. ‘யாரை தேர்வு செய்கிறோமோ, அதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். யாரும் வாயை திறக்க கூடாது. அவருடன் ஒருங்கிணைந்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்’ என, கட்டளையிட்டுள்ளது. எனவே மேலிடம் தேர்வு செய்யும் எதிர்க்கட்சி தலைவரை, மாநில பா.ஜ.,வினர் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பசவராஜ் பொம்மை, அஸ்வத் நாராயணா, அசோக், பசனகவுடா பாட்டீல் எத்னால், அரவிந்த் பெல்லத் ஆகியோரில் ஒருவருக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்