சென்னை: தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த பால் கொழுப்புச் சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப் படுகின்றன. கொள்முதல் செய்யப்படும் பாலில், கொழுப்புச் சத்து அளவைக் கூட்டவும், குறைக்கவும் பால் பவுடர் மற்றும் வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆவின் வாயிலாக, வெண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு, பாலில் கலக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தட்டுப்பாடு காரணமாக, வெளி மாநிலங்களில் இருந்து தேசிய பால் வளர்ச்சி வாரியம் பரிந்துரைப்படி வெண்ணெய் கொள்முதல் செய்யப்படுகிறது. வெண்ணெய் தரம் இல்லாததால், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பால் பாக்கெட்கள் கெடுவதாக பால் விற்பனை முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதை ஆவின் நிர்வாகம் மறுத்துள்ளது.
இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியது:தேசிய பால் வளர்ச்சி வாரியம் வாயிலாக, வெண்ணெய் பரிசோதனை செய்யப்படுகிறது. தரத்தை உறுதி செய்த பிறகே, வெண்ணெய் கொள் முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. 100 டன் அளவுக்கு தரமற்ற வெண்ணெய் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. எனவே,தரமற்ற வெண்ணெய் கொள்முதல் செய்யப்படுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றனர்.