“உதயநிதி காலத்தில் நீட் ஒழிந்தது என்கிற வரலாறு சரித்திரத்தில் இடம்பெறும்!" – துரைமுருகன் பேச்சு

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், “நீட் தேர்வை எதிர்த்து அறப்போராட்டமாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்

நீட் தேர்வு என்கிற கொடிய சட்டத்தை இளம் மாணவர்களின் முதுகில் சுமத்தி அவர்களை நிமிரவிடாமல் செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மருத்துவ வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். அந்த நிலையைப் போக்க வேண்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க நீண்ட நாட்களாக வாதாடி வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்களும் அதில் இணைந்திருக்கின்றனர். இதுபற்றி கவலையின்றி மத்திய மோடி அரசு நீட் தேர்வைத் திணிப்பதிலேயே வேகமாக இருந்து வருகிறது.

தமிழர்களிடம் போராட்ட முறைகளில் உயிர்விடுவது முக்கியமான போராட்ட முறை. தி.மு.க-வில் ஏராளமானோர் இந்தி திணிப்பை எதிர்த்து உயிர்விட்டிருக்கிறார்கள். இன்று நீட் தேர்வை எதிர்த்து இளம் மாணவர்கள் உயிர்விட்டிருக்கிறார்கள். இந்தி திணிப்பின் போது இந்தி திணிப்பு போராட்டத்தில் உயிர்விட்டவர்களின் சாபத்தினால் அதனைத் திணித்தவர்களின் ஆட்சி பறிபோனது. அதேபோன்று இன்று நீட் தேர்வை எதிர்த்து பலர் விடுகிற சாபம் மத்திய அரசின் ஆட்சியையும் ஒழித்துவிடும்.

நீட் தேர்வு எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்

அகில இந்திய அளவில் தி.மு.க மட்டும்தான் நீட் தேர்வை எதிர்ப்பதாகச் சிலர் பேசுகின்றனர். இந்தி திணிப்பு எதிர்ப்பில் எப்படி தமிழ்நாடு முன்னணியில் இருந்ததோ அதேபோல்தான் நீட் தேர்வை எதிர்ப்பதிலும் முன்னணியில் இருக்கிறது. இதற்குக் காரணம் தமிழர்கள், அறிவு, உணர்ச்சி மிக்கவர்கள். நீட் தேர்வு தமிழ்நாட்டைப் பாழாக்கிவிடும் எனவும், அதனால் அதனை ஒழிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகப் போராடி வருகிறோம்.

இன்று இளைய சமுதாயத்தின் ஒட்டுமொத்த தலைவராக இருக்கக் கூடிய உதயநிதி, நீட் தேர்வை ஒழித்துக் கட்டும் வரையில் இளம் சமுதாயம் ஓயாது எனச் சபதமேற்று, உண்ணாவிரதத்திற்குத் தலைமை தாங்கியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் அவரது தாத்தாவைப் போல்(கலைஞர்)எதனையும் வேகமாகச் செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர். நான் அதனைப் பலமுறை பார்த்திருக்கிறேன். உதயநிதியின் வேகம் தி.மு.க-வுக்கு உற்சாகம், இளைஞர்களுக்கும் தேவை.

நீட் தேர்வு எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்

எனவே நீட் தேர்வுக்கு எதிரான இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஏதோ ஒருநாள் இருந்தோம் என இல்லாமல் தொடர் போராட்டமாக உதயநிதி அறிவிப்பார். உதயநிதியின் காலத்தில் நீட் தேர்வு ஒழிந்தது, அதற்குக் காரணமாக இருந்தவர் அமைச்சர் உதயநிதி என்கிற வரலாறு சரித்திரத்தில் இடம்பெறும். அதனைச் செய்கிற ஆற்றல் அறிவு அனைத்தையும் பெற்றிருக்கும் உதயநிதிக்கு வாழ்த்துகள். உதயநிதிக்குக் கலைஞரின் வேகம் உள்ளது. மு.க.ஸ்டாலினின் திட்டமிட்டு பணியாற்றும் அனுபவம் உள்ளது. நான் 3 தலைமுறைகளைப் பார்க்கிறவன். அதனடிப்படையில் தான் நீட் தேர்வு ரத்து உதயநிதியால்தான் முடிவுக்கு வரும் எனக் கூறினேன்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.