காஞ்சிபுரம் – வேதவதி ஆற்றங்கரை மக்களை வெளியேற்றும் முடிவை கைவிடுக: ராமதாஸ்

சென்னை: “காஞ்சிபுரம் வேதவதி ஆற்றங்கரையில் வாழும் மக்கள் அனைவரும் அதே இடத்தில் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முடிவை கைவிடும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அரசு ஆணையிட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் நகரத்தின் மையப் பகுதியில் வேதவதி ஆற்றங்கரையில் குடிசைமாற்று வாரிய வீடுகளிலும், தனி வீடுகளிலும் வாழ்ந்து வரும் 3524 குடும்பங்களில் 600 குடும்பத்தினரை அங்கிருந்து அகற்றி கீழ்க்கதிர்பூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள குடிசைமாற்று வாரிய வீடுகளுக்கு அனுப்ப காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. 52 ஆண்டுகளுக்கும் மேலாக வேகவதி ஆற்றங்கரையில் வாழ்ந்து வரும் மக்களை அங்கிருந்து அகற்ற துடிப்பது கண்டிக்கத்தக்கது.

வேதவதி ஆற்றின் நீரோட்டப் பாதையை அதிகரித்து கரைகளை கட்டுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. இதை ஏற்க முடியாது. ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பொன்னையா இருந்தபோது பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் கரைகள் அமைக்கப்படும் என்று அறிவித்து பணிகளை தொடங்கினார். அந்த பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்பட்டிருந்தால் யாரையும் அகற்ற வேண்டிய தேவை இருந்திருக்காது. ஆனால், யாரோ சிலரின் தேவைகளுக்காக ஏழை மக்களை அங்கிருந்து அகற்ற புதிய மாவட்ட நிர்வாகம் முயலுகிறது. இது மக்கள் விரோத செயலாகும்.

கீழ்க்கதிர்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளின் மேற்பூச்சு தொட்டாலே உதிரும் அளவுக்கு தரம் குறைவாக உள்ளது. அந்த வீடுகளில் வாழும் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அந்தப் பகுதியில் அடிப்படை வசதிகளோ, பள்ளிக்கூடங்களோ இல்லை. இத்தகைய பகுதியில் மக்களை கட்டாயமாக குடியேற்ற முயலுவது அவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் செயலாகும். இதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது.

வேகவதி ஆற்றங்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்களில் பெரும்பான்மையினர் நெசவுத்தொழில் செய்பவர்கள். நூற்றுக்கணக்கான பெண்கள் அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்பவர்கள். அவர்களுக்கு புதிய இடத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்காது. அது மட்டும் இன்றி, குடியிருப்புக்கு மிக அருகில் மதுக்கடை இருப்பதாலும், அதில் குடித்துவிட்டு வரும் குடிகாரர்கள் ரகளையில் ஈடுபடுவதாலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

மக்களை அவர்கள் வாழும் பகுதிகளில் இருந்து அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிக்கு மாற்றுவது என்பது, தண்ணீரில் வாழும் மீன்களை தரையில் வீசி வாழச் சொல்வதற்கு ஒப்பானது ஆகும். எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையில் வாழும் மக்கள் அனைவரும் அதே இடத்தில் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முடிவை கைவிடும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அரசு ஆணையிட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.