மதுரை: ‘வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ எனப் பெயரில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மதுரையில் நடந்த அதிமுக மாநில மாநாட்டில் கவனம் ஈர்த்தவற்றில் சில இங்கே…
* மதுரை ‘ரிங்’ ரோட்டில் வலையங்குளத்தில் மாநாடு நடந்த இடத்துக்கு எதிரே கருப்பசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் விஷேசங்களை கேள்விப்பட்டு பொள்ளாச்சியில் இருந்து வந்த நிர்வாகி ஒருவர், கிடா கொண்டு வந்து வெட்டி, அதனை சமையல் செய்து மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு வழங்கினார்.
* மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டுக்காக, மாற்றுத்திறனாளி தொண்டர்கள் ஏராளமானோர் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் வந்திருந்தனர். கும்பகோணத்தில் இருந்து வயதான தம்பதி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கோவிலடியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரான இளங்கோவன், மதுரையில் நடைபெறும் மாநாட்டுக்காக கையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட தனது மனைவியுடன், சுமார் 250 கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு வந்துள்ளார்.
* மாநாட்டு பந்தலில் கே.பழனிசாமி கொடியேற்றி வைத்த பிறகு காலை முதல் மாநாடு முடிந்த இரவு வரை தொடர்ந்து தொண்டர்களுக்கு உணவுக் கூடங்களில் உணவும், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டு கொண்டிருந்தன.
* மாநாட்டுக்கு சென்னை, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி போன்ற தொலைதூர மாவட்டங்களில் இருந்து பஸ்கள், வேன்களில் வந்த நிர்வாகிகள், தொண்டர்கள், மாநாடு நடக்கும் ‘ரிங்’ ரோட்டில் அதிகாலை ஆங்காங்கே சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு தோட்டங்களில் குளித்துவிட்டு அங்கேயே சமையல் செய்த சாப்பிட்டு மாநாட்டிற்கு சென்றனர்.
* மதுரை மாநாட்டில் தொண்டர்களுக்கு அவசர சிகிச்சை வழங்குவதற்காக 30 மருத்துவர்கள், 50 செவிலியர்கள் அடங்கிய தனிக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். கட்சியினருக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கக்கூடிய வகையில் 10 ஆம்புலன்ஸ் மாஸ்டர் எமர்ஜென்சி ட்ரிட்மெண்ட் (Masters in Emergency Treatment) என்று சொல்லக் கூடிய அவசரகால சிகிச்சை வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாடு நடக்கும் வளையங்குளம் பகுதியில் இருந்து 10 கிமீ தொலைவிற்குள் இருக்கும் 5 பெரிய மருத்துவமனையிடம் ஏதேனும் விரும்பத்தகா நிகழ்வென்றால் உடனடி அட்மிஷனுக்கு ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். ஆனால், பெரியளவிற்கு மருத்துவத் தேவை ஏற்படவில்லை.
* மாநாட்டில் காலை முதல் மாலை வரை பந்தலில் அமர்ந்திருந்த தொண்டர்களை மகிழ்விக்க கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை கொடியேற்று விழா நடந்தபிறகு, மாலை கே.பழனிசாமி மேடைக்கு வரும் வரை, பந்தலில் அமர்ந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்களை மகிழ்விக்க இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசை கச்சேரி, மதுரை முத்து, ரோபா சங்கர், ராஜலெட்சுமி – செந்தில், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் நடுவராக சிறப்பு பட்டிமன்றம் போன்றவை நடந்தது. இதில், நடிகை விந்தியா, புதுக்கோட்டை செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், செய்தி தொடர்பாளர் கல்யாண சுந்தரம் போன்றோர் பேசினர்.