சிட்னி,
பெண்கள் உலகக் கோப்பை
9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வந்தது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் ஸ்பெயினும், இங்கிலாந்தும் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தன. இவ்விரு அணிகளில் யாருக்கும் கிரீடம் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் சிட்னியில் நேற்றிரவு 75 ஆயிரம் ரசிகர்களின் முன்னிலையில் அரங்கேறியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஸ்பெயினின் கையே சுற்று ஓங்கி இருந்தது. 16-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை லாரென் ஹெம்ப் அடித்த சூப்பரான ஷாட் கம்பத்தில் பட்டு நழுவியது. 18-வது நிமிடத்தில் ஸ்பெயினின் அல்பா ரிடோன்டோ அடித்த ஷாட்டை இங்கிலாந்து கோல் கீப்பர் மேரி எர்ப்ஸ் தடுத்து நிறுத்தினார்.
29-வது நிமிடத்தில் ஸ்பெயின் கேப்டன் ஒல்கா கர்மோனா, சக வீராங்கனை கால்டென்டி தட்டிக்கொடுத்த பந்தை அழகாக கோலுக்குள் திருப்பி அசத்தினார். பதிலடி கொடுக்க இங்கிலாந்து கடுமையாக போராடியது. ஆனால் கச்சிதமான வியூகங்களுடன் பிணைக்கப்பட்ட ஸ்பெயினின் பாதுகாப்பு வளையத்தை இங்கிலாந்து வீராங்கனைகளால் உடைக்க முடியவில்லை. 49-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை கால்டென்டி இலக்கை நோக்கி அடித்த பந்தை ஸ்பெயின் கோல் கீப்பர் கேட்டா கால் பாய்ந்து விழுந்து வெளியே தள்ளினார்.
ஸ்பெயின் சாம்பியன்
68-வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு மேலும் ஒரு கோல் போட சந்தர்ப்பம் கனிந்தது. கோல் பகுதியில் வைத்து பந்தை இங்கிலாந்து வீராங்கனை கெய்ரா வால்ஷ் கையால் தடுத்ததால் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த பொன்னான வாய்ப்பை ஸ்பெயின் வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசா வீணடித்தார். அவர் பெனால்டியில் உதைத்த பந்தை இங்கிலாந்து கோல் கீப்பர் மேரி எர்ப்ஸ் துல்லியமாக தடுத்து தங்கள் அணியை காப்பாற்றினார். இதன் பின்னர் ஸ்பெயின் வீராங்கனைகள் அடுத்தடுத்து கோல் கம்பத்தை முற்றுகையிட்டு இங்கிலாந்தை நெருக்கடிக்குள்ளாக்கினர். பந்தை தங்களது கட்டுப்பாட்டில் அதிக நேரம் (58 சதவீதம்) வைத்திருந்த ஸ்பெயின் வீராங்கனைகள் இறுதி கட்டத்தில் தடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தினர். கடைசி நிமிடத்தில் இங்கிலாந்தின் கார்னர் ஷாட்டை ஸ்பெயின் கோல்கீப்பர் பிடித்ததுடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தின் கனவை சிதைத்து முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது. அமெரிக்கா (4 முறை), ஜெர்மனி (2), நார்வே, ஜப்பான் ஆகிய அணிகளுக்கு அடுத்தபடியாக உலகக் கோப்பையை வென்ற பட்டியலில் இணைந்தது. கடந்த ஆண்டு 17 வயதுக்குட்பட்டோர், 20 வயதுக்குட்டோபர் உலகக் கோப்பையை சொந்தமாக்கிய ஸ்பெயின் இப்போது சீனியர் பட்டத்தையும் வென்று விட்டது. ஒரே காலக்கட்டத்தில் இந்த பட்டத்தையும் சுவைத்த முதல் அணி ஸ்பெயின் தான்.
பரிசுத்தொகை எவ்வளவு?
வாகை சூடிய ஸ்பெயின் அணிக்கு மொத்தம் ரூ.87½ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இதில் ரூ.51 கோடியை வீராங்கனைகள் பகிர்ந்து கொள்வார்கள். மீதம் உள்ள தொகை அந்த நாட்டு கால்பந்து சங்கத்திற்கு சென்று விடும் 2-வது இடத்தை பிடித்த இங்கிலாந்துக்கு ரூ.62½ கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது.
இந்த உலகக் கோப்பையில் 64 ஆட்டங்களில் மொத்தம் 164 கோல்கள் பதிவாகின. சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை விருதை இங்கிலாந்து கோல் கீப்பர் மேரி எர்ப்சும், தங்கப்பந்து விருதை ஸ்பெயினின் போன்மதி கான்காவும், அதிக கோல் அடித்தவருக்கான தங்க ஷூ விருதை ஜப்பானின் ஹினாட்டா மியாஜவாவும் (5 கோல்), சிறந்த இளம் வீராங்கனை விருதை 19 வயதான ஸ்பெயினின் சல்மா பராலுலோவும் பெற்றனர்.
அதிசய ஒற்றுமை
கால்பந்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை இரண்டையும் கைப்பற்றிய 2-வது அணி என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றது. ஏற்கனவே ஜெர்மனி இச்சாதனையை செய்துள்ளது.
ஆண்கள் உலகக் கோப்பை கால்பந்தில் 2010-ம் ஆண்டு ஸ்பெயின் பட்டத்தை வென்று சாதித்தது. அப்போது ஸ்பெயின் அணி குரூப் பிரிவில் ஒரு ஆட்டத்தில் தோற்ற பிறகே எழுச்சியுடன் முன்னேறி இறுதி ஆட்டத்தில் ஒரு கோல் போட்டு கோப்பையை கையில் ஏந்தியது. இதே போல் தான் இப்போது பெண்கள் உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயினுக்கு நிகழ்ந்துள்ளது. இதில் ஸ்பெயின் அணி குரூப் பிரிவில் ஜப்பானிடம் 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. லீக் சுற்றில் 2-வது இடத்தை பிடித்து நாக்-அவுட் சுற்றை அடைந்த ஸ்பெயின் அதில் இருந்து ஏற்றம் கண்டு இறுதி ஆட்டத்தில் ஒரே கோலுடன் கோப்பையை வசப்படுத்தி இருக்கிறது.