போபால்: மத்தியபிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சத்னா மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் பங்கேற்று பேசியதாவது:
ம.பி.யில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கியுள்ளீர்கள். டெல்லி மற்றும் பஞ்சாபில் அமைந்துள்ள அரசுகளை பாருங்கள். நாங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம்.
ம.பி.யில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், அனைத்து மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படும். ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியிடங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, நிரந்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படும். நவம்பர் 30-ம் தேதி வரை நிலுவையில் உள்ள மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
நாட்டை கட்டமைக்கவே நாங்கள் அரசியலுக்கு வந்தோம். பணம் சம்பாதிக்க வரவில்லை. நல்ல மனிதர்கள் மற்றும் தேச பக்தர்களின் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம் அமைந்திட விரும்பினால் அதற்கு உதவிடும் ஒரே கட்சி ஆம் ஆத்மி மட்டுமே.
இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் பேசினார்.