ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் சாஹலை சேர்த்திருக்க வேண்டும்: முன்னாள் வீரர் அதிருப்தி

மும்பை,

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 17-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேலுடன், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் முன்னாள் வீரர் மதன் லால் அதிருப்தி தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மதன் லால் கூறுகையில், ‘குல்தீப் யாதவின் பந்து வீச்சை ஆஸ்திரேலிய அணியினர் மிகவும் நன்றாக ஆடுகிறார்கள். ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும். அவர் ஒரு மேட்ச் வின்னர். அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த வீரர். அவருக்கு விக்கெட்டை வீழ்த்துவது எப்படி என்பது தெரியும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவர் விளையாடவில்லை என்பது அணி நிர்வாகத்துக்கு தெரியும். ஏறக்குறைய நாம் எல்லோரும் நினைத்தது போன்றே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. வீரர்களின் உடல் தகுதி கவலைக்குரிய விஷயமாகும். ஏனெனில் ஆசிய மற்றும் உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் வீரர்கள் உடல் தகுதி மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் உடல் ரீதியாக தகுதியுடன் இல்லை என்றால் மனரீதியாகவும் தகுதியோடு இருக்க முடியாது. காயங்கள் எப்போதும் உங்களை கவலை அடைய செய்யும். தேர்வாளர்கள் அதனை கவனித்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

மற்றொரு முன்னாள் வீரர் கர்சன் காவ்ரி கூறுகையில், ‘அஸ்வின் தரமான சுழற்பந்து வீச்சாளர். அவரை ஆசிய போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்திருக்க வேண்டும். 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய ஆடுகளங்களில் அவர் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய பவுலராக இருப்பார்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.