புதுடெல்லி: நிலவில் பிரக்யான் ரோவர் தடம் பதித்ததைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில், “இஸ்ரோ குழுவினருக்கும் நாட்டு மக்களுக்கும் நான் இன்னும் ஒருமுறை வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது. சந்திரயான்-3க்கு இது மற்றுமொரு வெற்றி. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் விஞ்ஞானிகள் மற்றும் குடிமக்களுடன் நானும் நிலவில் இருந்து வரவிருக்கும் அறிவியல் ஆராய்ச்சித் தகவல்களை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலனில் இருந்து சாய்தள பாதையின் வழியாக வெளிவந்த பிரக்யான் ரோவர் நிலவில் தடம் பதித்தது. இதனை இஸ்ரோ ஆய்வு மையம் தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியது. 6 கிலோ எடை கொண்ட பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் உலவி, ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக இஸ்ரோ பதிவு செய்த ட்வீட்டில், “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, நிலவுக்காக தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 லேண்டரில் இருந்து சாய்தளப் பாதை வழியாக பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கியது. இந்தியா நிலவில் நடைபயில்கிறது! அடுத்தடுத்த தகவல்கள் விரைவில்.. ” என்று தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.