வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்.,1 ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி குறுவை பயிர்களை காப்பாற்றுவதற்காக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறந்துவிடும்படி, கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் கர்நாடகாவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது.
தமிழகத்தின் மனு மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதிகள், வழக்கை செப்.,1 க்கு ஒத்திவைத்தனர். தொடர்ந்து நீதிபதிகள், ஆணையத்தின் உத்தரவை என்பது குறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யும்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். அடுத்த 15 நாட்களுக்கு தேவையான தண்ணீர் குறித்து விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளதுடன், இடைப்பட்ட காலத்தில், வரும் 28 ம் தேதி இரு மாநில அரசுகளின் கோரிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் கூடி ஆலோசனை நடத்த வேண்டும்.
தமிழகம், கர்நாடகா முன்வைக்கும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும். காவிரி விவகாரம் குறித்து எதையும் விசாரிக்காமல் உடனடியாக உத்தரவு பிறப்பிப்பது எங்களுக்கு சிரமம். காவிரி மேலாண்மை ஆணையத்தில் நிபுணர்கள் உள்ளனர். நாங்கள் நிபுணர்கள் இல்லை. இந்த விவகாரத்தை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஏன் இரண்டு மாநிலங்களும் எடுத்து செல்லக்கூடாது என கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், தண்ணீரை திறந்துவிடும் கெடு முடிந்ததும், கர்நாடக அரசு தண்ணீர் திறப்பை நிறுத்திவிடும். தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டால், தமிழகத்தில் விதைத்துள்ள பயிர்கள் கருகிப்போய் விடும் என வாதிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement